அமமுக அமைப்புச்செயலாளர் இசக்கி சுப்பையா அக்கட்சியில் இருந்து விலகி, வரும் 6ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைகிறார். இது குறித்து அவர் இன்று குற்றாலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், ‘’2011ல் நெல்லை மாவட்ட மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று அமைச்சரான நான் எந்த கூட்டத்திலும் நான் யாரையும் குறைசொல்லி பேசுவதில்லை.
டி.டி.வி.யின் இன்றைய பேட்டி மன வருத்தத்தை அளிக்கிறது. ஒரு மண்டலம் இவர் அமைச்சராக இருந்தவர் என்று டி.டி.வி. தினகரன் கிண்டல் பண்ணி இருக்கிறார். நாங்கள் கிண்டலடிபடக் கூடியவர்கள் தான். பாதாள சாக்கடை ஒப்பந்ததாரர் என்று சொல்கிறார். அவருக்குத் தெரியாதா..... எங்கள் பரம்பரையே காண்ட்ராக்ட் தொழிலில் ஈடுபட்டு வருவது தான்.
இரட்டை இலை சின்னம் பிரச்சனையை 2017 என்பதற்கு பதிலாக 2007 என்கிறார். அவர் கூட்டம் போட்ட தேதியை மாற்றி செல்கிறார். இதிலிருந்தே யாருக்கு பதட்டம் என்று தெரியும். கட்சிக்காக பொருள், ஆவி அனைத்தையும் இழந்து நிற்கிறேன். நான் யாரையும் குறை சொல்லவில்லை. என்னை பற்றிய மட்டுமே பதில் சொல்கிறேன்.
எங்களுடன் தொண்டர்கள் மீண்டும் தாய் கழகத்திலேயே இணைய வேண்டும் என்று சொன்னார்கள். அதனால் தான் வரும் 6ம் தேதி முதல்வர் மற்றும் துணை முதல்வர் அவர்கள் பெருந்தன்மையோடு பெரும் உள்ளத்தோடு நீங்கள் இங்கு வரவேண்டாம். நாங்கள் அங்கு வருகிறோம் என்று சொல்லி தென்காசிக்கு வருகிறார்கள். அவர்கள் முன்னிலையில் நாங்கள் பெரும் படையுடன் இணைய இருக்கிறோம்.
அ.ம.மு.க தற்போது செயல்பட்டு வரும் அலுவலகம் எனக்கு சொந்தமானது அல்ல. எனது மகன் இயக்குனராக உள்ள நிறுவனத்திற்கு சொந்தமானது. அது அந்த அலுவலகம் அமைய ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி செயல்படும்.
தி.மு.க.விலிருந்தும், பாரதிய ஜனதாவில் இருந்தும் அவர்கள் கட்சியில் சேருமாறு அழைப்பு விடுக்கப் பட்டது உண்மை தான்.
அமைச்சர் வேலுமணி எனக்கு நெருங்கிய நண்பர். அரசியல் வேறு தொழில் வேறு. எனக்கு எழுபது கோடி பாக்கி இருப்பதாக டி.டி.வி. தினகரன் சொல்லியிருக்கிறார். அது உண்மை அல்ல. 58 கோடி தான் பாக்கி இருக்கிறது. இது வர்த்தகத்தில் சகஜமான ஒன்று தான்.
சில முடிவுகள் தான் நாங்கள் அங்கிருந்து வெளியேற காரணம். அது என்ன முடிவு என்று கேட்காதீர்கள். அதை சொல்ல மாட்டேன். நாகரீகம் கருதி அதை என்னால் சொல்ல முடியாது.
ஆறாம் தேதி முதல்வர் முன்னிலையில் இணையும் அனைவருமே தொண்டர்கள் தான். அனைவருமே முக்கிய பிரமுகர்கள் தான். ஒன்று இரண்டல்ல 20,000 முக்கிய பிரமுகர்கள் தான் அ.தி.மு.க.வில் இணைகிறார்கள்’’என்று தெரிவித்தார்.