உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் மீதான பயம் எப்போது குறையும் என்ற பரிதவிப்பு தான் இப்போது ஒட்டுமொத்த மக்களின் வேண்டுகோள்.
கடைகள், வணிக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள், அனைத்து மத கோயில்கள் என எல்லாமே மூடப்பட்டு மருத்துவமனை மட்டுமே திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. விமான, ரயில், பேருந்துகளின் இயக்கமும் பெருமளவு குறைந்து விட்டது. நாட்டின் எல்லைகள் மூடி சீல் வைக்கப்பட்டது. அப்படித்தான் இந்தியாவின் எல்லைகளும் கதவை மூடியாகி விட்டது. இப்போது ஒவ்வொரு மாநிலத்திற்கு மாநிலம் உள்ள எல்லைகளும் மூடும் நிலை தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகம் கர்நாடகம் எல்லையாக உள்ளது மேற்கு தொடர்ச்சி மலையான சத்தியமங்கலம் வனப்பகுதி. இதில் மலையில் உள்ள தாளவாடி தமிழகத்தின் எல்லை. அதேபோல் கர்நாடகாவுக்கு புளிஞ்சூர் என்ற வனகிராமம் எல்லையாக உள்ளது. இதுவரை கர்நாடகாவிலிருந்து 36 பேருந்துகள் தனது எல்லையை கடந்து தமிழகத்திற்கும் தமிழகத்திலிருந்து 17 பேருந்துகள் தமிழக எல்லையை கடந்து கர்நாடகாவுக்கும் ஒவ்வொரு நாளும் போக்குவரத்தாக பயணம் செய்து வந்தது. இப்போது கர்நாடகா பேருந்துகள் அதன் எல்லையோடும், தமிழக பேருந்துகள் நம் எல்லையுடன் நிறுத்துவதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் அறிவித்துள்ளார்.
போகிற போக்கை பார்த்தால் ஒவ்வொரு மாவட்ட எல்லையும் மூடப்படும் சூழல் உருவாகிவிடுமோ என்பது தான் கேள்வியாக உள்ளது.