தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களின் (விசாரணை நீதிமன்றம்) பணிகளும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அதன் பணிகளை நிறுத்தி வைத்து உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தலைமைப் பதிவாளர் பி.தனபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில். “கரோனா பரவல் அண்மை காலத்தில் அதிகமாக இருப்பதால் அதில் இருந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிறுத்து வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கீழ்கண்ட உத்தரவுகளை பிறப்பித்து உள்ளதாகவும் நீதிமன்ற பணிகளும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அதன் நிறுத்தி வைப்பட்டுள்ளது. கைதிகளை சிறையில் அடைப்பதற்கான ரிமாண்ட் உத்தரவை தவிர்த்து பிற பணிகள் இதில் அடங்கும் மற்ற பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும். மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்ற வளாகங்களிலும் வழக்காடிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்ட நீதிபதிகளின் முன் அனுமதியின்றி நுழைய தடை விதிக்கப்படுகிறது. அதை போல் தேவையின்றி நீதிபதிகள், நீதித்துறை ஊழியர்கள் நீதிமன்ற கட்டிடங்களுக்குள் நுழைய வேண்டாம்” எனவும் உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நெல்லை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி காலமானார். இந்நிலையில் இந்த அறிவிப்பை சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் வீடுகளில் இருந்து காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்க மாவட்ட நீதிமன்றங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு நீதிபதிகள் சங்கம், தலைவர் நீதிபதி பாபு கடந்த வாரம் உயர்நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடதக்கது.