சிதம்பரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் கிள்ளை பேரூராட்சியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இது சுமார் 1,100 ஹெக்டேர் பரப்பளவில் 4500 கால்வாய்களுடன் அமைந்துள்ள உலகின் 2-வது பெரிய சதுப்பு நில காடுகள்( அலையாத்தி) ஆகும். பிச்சாவரம் சதுப்பு காடுகள் கடலையொட்டி முகத்துவாரத்தில் அமைந்திருக்கிறது. ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் இருப்பதால் சதுப்பு நிலங்களில் அலையாத்தித் தாவரங்கள் நன்கு வளர்கிறது. மரங்களின் விழுதுகள் மீண்டும் மரமாகிறது. இங்கு செப்டம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை பறவைகளின் வரவு அதிகமாக இருக்கும். ஆகையால் இந்தப் பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக வனத்துறை பராமரிக்கிறது.
இங்குள்ள நீர்நிலை வற்றாமல் படகு சவாரிக்கு ஏற்றதாக உள்ளதால் கடந்த 1984ஆம் ஆண்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் பிச்சாவரம் படகு குழாம் துவங்கப்பட்டது. இதில் தற்போது 35 துடுப்பு படகுகள் மற்றும் 15 இயந்திர படகுகள் உள்ளன. அதேபோல் வனத்துறையும் தனியாக 5 படகுகள் மூலம் படகு சவாரி செய்யும் வகையில் படகு குழாம் நடத்தி வருகிறது. இந்தச் சுற்றுலா மையத்திற்கு அரசு விடுமுறை நாட்கள், பண்டிகை காலம், கோடை காலங்களில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்து சதுப்புநில காடுகளின் பச்சை பந்தல் விரித்த அலையாத்தி காடுகளில் உள்ள சுரபுன்னை மரங்கள் உள்ளிட்ட இயற்கை அரண்களை ரசித்தவாறு படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்கிறார்கள்.
அரசு விடுமுறை, பள்ளி கல்லூரிகள் விடுமுறைக்காலங்களில் ஒரு நாளைக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சென்னை உள்ளிட்ட நெடுந்தூரத்திலிருந்து வருகிறார்கள். அதே நேரத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்குமேல் அரசு விடுமுறை, பொங்கல், காணும் பொங்கல், தீபாவளி உள்ளிட்ட தமிழக பண்டிகை காலங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கார், பேரூந்து உள்ளிட்ட வாகனங்களில் பிச்சாவரத்திற்கு வருகிறார்கள். இதில் நெடுந்தொலைவில் இருந்து வரும் பல ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படகு சவாரி செய்யமுடியாமல் திரும்பிச் செல்லும் அவலநிலை ஏற்படுவது அப்பகுதியில் வணிகர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்னையில் இருந்து குடும்பத்துடன் படகு சவாரி செய்ய முடியாமல் திரும்பிய பெண் சுற்றுலா பயணி கூறுகையில், “தமிழக அரசு இதுபோன்ற பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்பவர்களுக்கு தனியார் பேருந்துகளை வாடகைக்கு இயக்கி கூட்டத்தைச் சமாளிக்கிறார்கள். அதே நேரத்தில் இதுபோன்று பண்டிகை காலங்களில் சுற்றுலா தளங்களுக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகிறார்கள். குறிப்பாக பிச்சாவரம் படகு சவாரி தமிழக அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் சிறப்பு பெற்று வருகிறது. இது குறைந்த செலவில் படக்கு சவாரி செய்வதற்கு ஏற்ற இடமாக உள்ளதால் குடும்பத்துடன் 10 பேர் சென்னையில் இருந்து காரில் வந்தோம். ஆனால் மதியம் 12 மணிக்குள் டோக்கன் அனைத்தும் தீர்ந்துவிட்டது என்கிறார்கள். இந்த நாளில் அதிக தேவை உள்ளதால் ஆன்லையனிலும் பதிவு செய்ய முடியவில்லை. இதனால் படகு சவாரி செய்ய முடியாமல் திரும்புகிறோம் இது வேதனையை ஏற்படுத்துகிறது.
தமிழக அரசு இது போன்ற பண்டிகை காலங்களில் இப்பகுதியில் உள்ள மீனவர்களின் படகுகளை வாடகைக்கு எடுத்து சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் வகையில் தயார் செய்ய வேண்டும். பிச்சாவாரத்திற்கு அதிக அளவு கூட்டம் வருகிறது. இங்குள்ள படகுகள் போதுமானதாக இல்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் மனவிரக்தி அடைந்து செல்கிறார்கள்” என்றார்.
பிச்சாவரம் சுற்றுலா மையத்தைச் சுற்றியுள்ள வணிகர்கள் கூறுகையில், “படகு சவாரி செய்ய 10 மணி முதல் மாலை 4 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. இந்த நேரத்தைக் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை என மாற்ற வேண்டும். இதனால் பல ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படகு சவாரி செய்ய முடியும். நேரம் குறைவால் விசேச காலங்களில் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து திரும்பிச் செல்வது வேதனையாக உள்ளது.
படகு சவாரி நேரத்தை மாற்றி அமைத்தால் பிச்சவாரம் சுற்றுலா மையம் இன்னும் சிறப்புப் பெறுவதோடு இப்பகுதியில் உள்ள பொதுமக்கள், வணிகர்களின் வாழ்வாதாரம் மேம்படும். தற்போது அரசு சார்பில் 13 கோடிக்கு சுற்றுலா தளத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேநேரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு படகு சவாரி செய்வதற்கான படகுகளை அதிகப்படுத்த வேண்டும். மேலும் அதிகாலையில் சூரிய உதயத்தை பார்க்க ஏற்படு செய்தால் இன்னும் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள்” என்கிறார்.
இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த சபரிநாதன் என்பவர் குடும்பத்தினருடன் படகு சவாரி செய்ய பிச்சாவாரத்திற்கு காணும் பொங்கல் அன்று வந்துள்ளார். அப்போது வனத்துறையினர் படகு சவாரி செய்ய நேரம் முடிந்து விட்டது என்பதால் நீண்ட நேரம் காத்திருந்ததால் ஆத்திரத்தில் மனவேதனையடைந்த விரக்தியில் அவர் வனத்துறை அலுவலக கண்ணாடியை உடைத்துள்ளார். இதுகுறித்து வனத்துறையினர் கிள்ளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். நெடுந்தூரத்தில் இருந்து வந்து படகு சவாரி செய்யமுடியாமல் திரும்பும் அனைவரும் இதேபோன்ற மனவிரக்தியுடன் தான் செல்கிறார்கள் என்பது தான் நிலைமை. அரசு நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.