சுந்தர்.சி மற்றும் விஷால் கூட்டணியில் உருவாகி 10 ஆண்டுகளுக்கு மேல் வெளியாகாமல் கிடப்பில் இருந்த ‘மதகஜராஜா’ படம் கடந்த பொங்கலை முன்னிட்டு கடந்த 12ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் சந்தானம், சோனு சூட், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி ஆகியோர்களுடன் மறைந்த நடிகர்களான மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்துள்ள இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் படக்குழு சார்பில் நன்றி தெரிவிக்கும் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு படம் குறித்து நிறைய விஷயங்கள் பேசினர். அப்போது விஷால் பேசிய விஷால், வரலட்சுமிக்காக கணகலங்கியதாக தெரிவித்தார். அவர் பேசியதாவது, “என் வாழ்க்கையில் நிறைய தடைகளை சந்தித்து இருக்கிறேன். ஆனால் எதற்கும் அழுதது கிடையாது. கடைசியாக கண் கலங்கியது ஹனுமான் படத்தில் வரலட்சுமி வரும் காட்சிக்குத் தான். அந்தப் படத்தில் தேங்காய் ஃபைட் ஒன்று இருக்கிறது.
அதைப் பார்த்து வரலட்சுமிக்காக கண்கலங்கினேன். அவர் வாய்ப்புக்காக எவ்வளவு ஏங்கினார் என்பது எனக்கு தெரியும். அந்த நாட்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது அவர் தெலுங்கில் பிஸியான நடிகையாக இருக்கிறார். அதை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. அதே போல் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பார்த்தும் சந்தோஷப்படுகிறேன்” என்றார்.