சிதம்பரம் நடராஜர் கோயில் தெற்கு வாயில் அருகே 63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் நுழைந்த வாயிலை திறக்க வேண்டும் என சிதம்பரத்தில் தெய்வீக பக்தர்கள் பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிதம்பரத்தில் தெய்வீக பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று(18.1.2024) நடைபெற்றது. கூட்டத்திற்கு நிறுவனத் தலைவர் ஜெமினி எம்.என். ராதா தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் ஏ.ராஜசேகர் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் செல்வகுமார் மாநில பொதுச் செயலாளர் விஜயகுமார் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் மாநிலத் துணைத் தலைவர் ஆர் சம்பந்த மூர்த்தி மாநில பொதுச் செயலாளர் ரகோத்தம்மன் இணை செயலாளர்கள் ஓட்டுநர் ரவி சீனிவாசன் விக்னேஸ்வரன் பரணி சூரியபிரகாஷ் ஸ்ரீராம் மாதவன் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் தெற்கு வாயில் அருகே நந்தனார் நுழைந்த வாயில் என கூறப்படும். 63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலேயே அவர் சென்று வழிப்பட்டதாக கூறப்படும் தெற்கு கோபுர வாசலை தீட்சிதர்கள் அடைத்து விட்டனர். மேலும் இந்த இடத்தில் மரத்திலான பெரிய கதவு ஒன்று அமைத்துள்ளனர். தீண்டாமையின் அடையாளமாக இருக்கும் அந்த வாசலை திறக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் அரசை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
நந்தனார் வழிபடச் சென்ற சிதம்பரம் நடராஜர் கோவில் தெற்கு வாசலை திறப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் கொண்ட ஆய்வு குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் இது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் மண்டல இன்று சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெ பரணிதரன் ஆகியோருக்கு தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.