அதிமுகவின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 108வது பிறந்த நாள் நேற்று (17.01.2025) தமிழ்நாடு அரசின் சார்பில் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக சார்பில் சென்னையில் உள்ள கண்ணகி நகரில் எம்ஜிஆரின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் இன்று (18.01.2025) நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு உள்ளார். போட்டோ ஷூட் நடத்தி மக்களை ஏமாற்றிக் கொண்டுள்ளார். ஊடகங்களில் உண்மை செய்திகளை வெளியிட்டால் திமுக காணாமல் போய்விடும்.
நாட்டில் நடக்கும் சம்பவங்களையும் பிரச்சனைகளையும் உண்மை செய்திகளாக வெளியிட்டால் திமுக இருக்கிற இடம் தெரியாமல் போய்விடும். கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது திமுக சார்பில் 525 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் இதுவரை 20% அறிவிப்புகள் கூட நிறைவேற்றப்படவில்லை. மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் கொடுத்தோம் என முதல்வர் எப்போதும் சொல்கிறார். ஆனால் அதனையும் அதிமுக சார்பில் அதனை வாதாடி போராடி தான் வாங்கி கொடுக்கப்பட்டது. மீன்பிடித் தடைக்காலத்தில் நிவாரணமாக வழங்கப்பட்ட 2500 ரூபாய் 5000 ரூபாயாக உயர்த்தி கொடுக்கப்பட்டது.
மானிய விலையில் நாட்டுப் படகு வழங்கப்பட்டது. மீன்பிடி குறைந்த காலத்தில் 5 லட்சம் 247 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. உதயநிதியைத் துணை முதல்வராக்கியது தான் திமுக அரசின் சாதனையாகும். கொரோனா காலத்தை அதிமுக ஆட்சி சீறிய முறையில் கையாண்டது. ரேஷன் கடைகளில் பொருள்கள் கிடைப்பது இல்லை. அல்வாதான் கொடுக்கிறது திமுக அரசு. தமிழகம் கல்வியில் முதலிடத்தில் இருப்பதற்குக் காரணம் அதிமுக தான். தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் தான் அதிக மருத்துவ கல்லூரிகளும் பாலிடெக்னிக் கல்லூரிகளும் கொண்டுவரப்பட்டன. அதிமுக ஆட்சிக் காலத்தின் மீனவர்களுக்கு ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டன” எனப் பேசினார்.