பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த இரண்டு நாட்களாக உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அதனை தொடர்ந்து மூன்றாம் நாளான காணும் பொங்கல் தினமான இன்று (16-01-25) அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில், தமிழக அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிசாமி மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அவரது மகன் இன்பநிதி ஆகியோர் கலந்து கொண்டு இந்த போட்டியை கண்டு மகிழ்ச்சியடைந்தனர். இதற்கிடையில், இந்த போட்டியின் போது இன்பநிதியின் நண்பர்களுக்காக தனது இருக்கையில் இருந்த மாவட்ட ஆட்சியர் சங்கீதா எழுந்த நின்றதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வெளியானது. இது சர்ச்சையான நிலையில் பலரும் விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில், இன்பநிதியின் நண்பர்களுக்காக எழுந்து நின்றதாக பரவிய வீடியோ குறித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் போது எழுந்திருக்க சொன்னதாக திரித்து சொல்லப்படுகிறது. என்னை யாரும் எழுந்திருக்கவோ, நிற்கவோ சொல்லவில்லை. அமைச்சர் எழுந்து நின்றதால், விதிகளின்படி மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் நானும் எழுந்து நின்றேன்” என்று கூறினார்.