சென்னையில் நடைபெற்ற தி.மு.க. சட்டத்துறை மூன்றாவது மாநில மாநாடு இன்று (18.01.2025) நடைபெற்றது. இந்த மாநாட்டை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம் தென்னரசு, எஸ். ரகுபதி, பொன்முடி, திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அக்கட்சியின் சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ, கிரிராஜன் எம்.பி. உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மேலும் இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் இந்த மாநாட்டில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், “இந்திய நாட்டையும், அரசியலமைப்புச் சட்டத்தையும், மக்களாட்சியையும் காக்கத்தான் நாம் போராடிக் கொண்டு இருக்கிறோம். ஆனால், நம்மை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானவர்களாகச் சித்தரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி. எந்த ஆளுநர்? மரபுப்படி, நிறைவாக பாடப்படும் நாட்டுப்பண் பாடலுக்குக்கூட நிற்காமல் வெளியேறிய ஆளுநர். இருந்தாலும் மத்திய அரசுக்கு நான் வைக்கும் கோரிக்கை என்பது, நான் ஆளுநரை விமர்சிக்கிறேன் என்று அவரை மாற்றிவிடாதீர்கள். அவர் பேச பேசத்தான் பா.ஜ.க. அம்பலப்படுகிறது. திராவிடக் கொள்கைகள் மேலும் மேலும் மக்களிடம் சென்று சேருகிறது.
மக்களுக்கும் மாநில சுயாட்சி முழக்கத்தின் நியாயங்கள் புரிகிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இன்று முழுவதும் இந்த மாநாட்டில், நம்முடைய தோழர்கள் திராவிடவியல் குறித்து அழுத்தமாக உணர்வோடு பேசுவதற்கான தூண்டுகோலாக இருப்பவரும் நம்முடைய ஆளுநர்தான். தந்தை பெரியார் அடிக்கடி ஒன்றைச் சொல்வார், ‘என்னை செயல்பட வைப்பது, என்னுடைய தோழர்கள் அல்ல; என்னுடைய எதிரிகள்’ என்று சொல்வார். அப்படிப்பட்ட கொள்கை எதிரிகளை, பண்பாட்டு எதிரிகளைத்தான் நாம் இன்றைக்குப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
இன்றைய எதிரிகள் கருத்தியல் மோதலுக்கு தயாராக இல்லை. ஏன் என்றால், கருத்தியல் ரீதியாக பேசினால் அவர்களால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது. அதனால்தான், அவதூறுகளை ஆயுதங்களாக எடுக்கிறார்கள். அந்த துரோகக் கூட்டத்தைத் துடைத்தெறிய வேண்டிய கடமை சட்டப் போராளிகளான உங்களுக்கு இருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை காக்கும் கடமை நமக்கு இருக்கிறது. இந்தியா முழுமைக்கும் சமூகநீதியை உருவாக்கித் தந்து பாதுகாக்கும் கடமையும் நமக்கு இருக்கிறது” எனப் பேசினார்.