புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல், மண், மலை உள்ளிட்ட கனிமவளங்கள் சட்டவிரோதமாகக் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. பெயருக்கு ஒரு அரசு அனுமதியை வாங்கிக் கொண்டு ஒதுக்கப்பட்ட அளவைவிட பல ஆயிரம் மடங்கு கனிமங்கள் வெட்டி அள்ளப்படுவதைப் பல முறை ஆய்வுகளில் கண்டறியப்பட்டாலும் அதிகாரிகள் மெத்தனததால் தொடர்ந்து கனிம வள கொள்ளை நடந்து கொண்டே இருக்கிறது. விதியை மீறிய குவாரிகளுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை கூட கட்டாமல் காலம் கடத்துவதையும் துறை அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதே போல, திருமயம் தாலுகா கோனாபட்டு அஞ்சல் வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த கரீம் மகன் ஜகபர் அலி. முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலரான இவர் சமூக ஆர்வலரும் கூட. இவர், திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிம வள கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதாரங்களுடன் பல முறை மனு கொடுத்து வருகிறார். ஆனால், அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து இதுபோன்று மனுக்களை கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி 10 ஆம் தேதி ஜகபர் அலி புதுக்கோட்டை கோட்டாட்சியருக்கு கனிம வள கொள்ள நடப்பதாக மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், சில குவாரிகளின் பெயர்களுடன் பல ஆதாரங்களையும் இணைத்து பல நூறு கோடிக்கான கனிம வள கொள்ளை நடந்துள்ளது. அதனை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த 6 பக்க மனுவுடன் பல ஆதாரங்களையும் இணைத்து கொடுத்துள்ளார். இந்த சூழலில் தான் நேற்று(17.1.2025) வெள்ளிக்கிழமை ஜகபர் அலி பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி மோதியதில் ஜகபர் அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து திருமயம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கனிம கொள்ளைக்கு எதிராக தொடர்ந்து போராடிய சமூக ஆர்வலர் ஜகபர் அலி கடைசியாக 10 ஆம்தேதி புதுக்கோட்டை கோட்டாட்சியரிடம் பல ஆதாரங்கள், ஆவணங்களுடன் மனு கொடுத்த 7 நாட்களில் டிப்பர் லாரி மோதி உயிரிழந்தார் என்பது சந்தேகத்தை எழுப்புவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், கனிம கொள்ளையர்களால் விபத்து ஏற்படுத்தப்பட்டிருக்குமோ என்ற வலுவான சந்தேகம் உள்ளதால் முறையான விசாரணையும் நீதியும் வேண்டும் என்கின்றனர்.