கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை டெல்லியில் இருந்து வரும் ஒன்றிய குழு இன்று ஆய்வு செய்கிறது. தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகர் கே.பி.சிங் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை கணக்கிட இருக்கிறது.
மழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தூத்துக்குடி, நெல்லை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதிகன மழையால் பல இடங்களில் இன்னும் வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நெல்லை மாவட்டத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கனமழையால் பதினெட்டாம் தேதி ரத்தான அரையாண்டு தேர்வு ஜனவரி இரண்டாம் தேதி நடைபெறும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி, மாநில அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் வழங்கும் துறை அலுவலர்களுக்கு விடுமுறை பொருந்தாது என தூத்துக்குடி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.