நிர்மலா சீதாராமனுக்கு பக்தி இல்லை; அது பகல் வேஷம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், “1967 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை சுயமரியாதை திருமணங்களை நடத்த முடியாத சூழல் இருந்து வந்தது. அறிஞர் அண்ணா தலைமையில் அமைந்த திமுக ஆட்சிதான் சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் அளித்தது. திமுக வளர்ச்சியை பொறுக்க முடியாமல் தவறான, தேவையற்ற பிரச்சாரங்களையும், பொய் செய்திகளையும் பரப்பி வருகின்றனர். அண்ணாமலை குழப்பினாலும் கவலைப்படமாட்டேன். ஆனால் சமூக ஊடகங்களை பயன்படுத்தி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களை குழப்பிக் கொண்டிருக்கிறார்.
5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்கள் திமுக ஆட்சியில் தான் மீட்கப்பட்டுள்ளன. உண்மையான பக்தி உள்ளவர்கள் திமுக அரசை பாராட்டுவார்கள். நிர்மலா சீதாரமனுக்கு உண்மையிலேயே பக்தி இருந்திருந்தால் திமுக ஆட்சியை பாராட்டி இருக்க வேண்டும். நிர்மலா சீதாராமனுக்கு இருப்பது பக்தி இல்லை; அது பகல் வேஷம். நிர்மலா சீதாராமன் மக்களை ஏமாற்ற பகல் வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார். திராவிட மாடல் ஆட்சியை வீழ்த்துவதற்காக திட்டமிட்டு சிலர் தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர்” எனப் பேசினார்.