டிக் டாக் பதிவு செய்யக்கூடாது என்று கணவன் கண்டித்ததால் 40 சவரன் நகைகளுடன் புதுமணப்பெண் மாயமானார்.
சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டையைச் சேர்ந்த வனிதாவுக்கும், சானாவூரணியை சேர்ந்த ஆரோக்கியலியோவுக்கும் கடந்த ஜனவரி மாதம் 17 ந்தேதி திருமணம் நடந்தது. திருமணம் ஆகி சில மாதங்கள் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். பின்னர் ஆரோக்கியலியோ வேலை நிமித்தமாக சிங்கப்பூர் சென்றுவிட்டார். பின்னர் தனியாக இருந்த வனிதா டிக் டாக் வீடியோவை பொழுதுபோக்காக பயன்படுத்தி வந்துள்ளார். இதன் மூலம் திருவாரூரைச் சேர்ந்த அபி என்ற பெண்ணுடன் நட்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் சேர்ந்து டிக் டாக் வீடியோவில் வருவதை கண்ட ஆரோக்கியலியோ, டிக் டாக் வீடியோவெல்லாம் வேண்டாம் என்று கூறியுள்ளார். மேலும் தான் சிங்கப்பூரில் இருந்து செலவுக்காக அனுப்பிய பணத்தையும் தனது தோழியுடன் செலவழித்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. தான் எவ்வளவோ சொல்லியும் வனிதா கண்டுகொள்ளவில்லை என்றதும், கடந்த வாரம் சிங்கப்பூரில் இருந்து ஆரோக்கியலிலோ ஊருக்கு திரும்பியுள்ளார். அப்பவும் சொன்னதை கேட்கவில்லை என்றதும், வனிதாவை அவரது தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்று புத்திமதி சொல்லுமாறு கூறியுள்ளார்.
வனிதா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வனிதாவுக்கு அறிவுரை கூறியுள்ளனர். இந்த நிலையில் தாய் வீட்டிற்கு சென்ற வனிதா, தனது சகோதரியின் நகைகள் 25 சவரன், தனது நகைகள் என 40 சவரன் நகைகளை எடுத்துக்கொண்டு திடீரென மாயமானார்.
இந்த சம்பவம் தொடர்பாக திருவேகம்பத்தூர் காவல்நிலையத்தில் மகள் வனிதா மாயமானதாக அவரது தாய் அருள் ஜெயராணி புகார் அளித்துள்ளார். மேலும் தனது மகள் வனிதாவுடன், அவரது தோழி அபி என்பவர் டிக் டாக் செய்த வீடியோவையும் அளித்துள்ளார்.