நவ. 24 துக்ளக் வார இதழின் பொன்விழா, திருச்சி புதிய கலையரங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீனா பெல்சியா, தலைவர் ராஜப்பா ராஜ்குமார், ஆன்மிக சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணன், காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவிமணியன், ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே ஆகியோர் பங்குபெற்றனர்.
ரங்கராஜ் பாண்டே பேசும் போது, "ஜெயலலிதாவையும், சசிகலாவையும் பிரித்து பார்க்க வேண்டாம். இரண்டு பேரும் ஒரே ஆளுமை தான். பாஜக மாராட்டியத்தில் செய்த அரசியல் தார்மீக அடிப்படையில் தவறானது. இதே போன்று நாளை பாஜகவுக்கும் நடக்கும், ரஜினியை சுற்றி குருமூர்த்தி, தமிழருவிமணியன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் தொடர்ந்து ஆலோசனை செய்துகொண்டு இருக்கிறார்கள், பாவம் ரஜினி இந்த ஆலோசனைகளை கேட்டு குழம்பிதான் போய் இருப்பார்" என்றார்.
அடுத்து பேசிய தமிழருவி மணியன், "தமிழகத்தில் இரண்டு திராவிட கட்சிகளை தவிர புதியவர்கள் ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற மையப்புள்ளிதான் என்னையும், சோவையும் இணைத்தது. எங்களுக்குள் 30 ஆண்டுகளுக்கு மேல் நட்பு இருந்தது.
தமிழகத்தில் வெற்றிடம் இருப்பது என்பது உண்மைதான். என் மூச்சு முடிவதற்குள் திராவிட கட்சிகள் தமிழகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதே என் எண்ணம் . திராவிட இயக்கங்கள் தமிழால் வளர்ந்த இயக்கங்களே தவிர, தமிழை வளர்த்த இயக்கங்கள் இல்லை. தமிழை அழித்த இயக்கங்கள் தான் திராவிட இயக்கங்கள். திராவிட இயக்கங்கள் நச்சு இலக்கியத்தை தான் விதைத்தது. எந்த ஆற்றலும் இல்லாதவர் கூட எடப்பாடி பழனிசாமி இடத்தை நிரப்பிவிடலாம். சாதி, பணம், மதம் தான் இன்றைய தமிழக அரசியலை நிர்ணயிக்கிறது. நாங்குநேரியில் சிறுபான்மை மக்களின் வாக்கை பெறுவதற்காக பிரச்சாரம் மேற்கொண்டார் ஸ்டாலின். விக்கிரவாண்டியில் வன்னியர்களின் வாக்குகளை பெறுவதற்காக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதாகவும், மணிமண்டபம் கட்டுவதாகவும் அறிக்கை வெளியிட்டார் ஸ்டாலின். சாதியையும் மதத்தையும் நம்புகிறது திராவிட முன்னேற்ற கழகம்.
அதேபோல பண மூட்டைகளை நம்புகிறது அதிமுக. இதை நான் தைரியமாக பகிரங்கமாக குற்றம் சாட்டுவேன். எடப்பாடி ஆட்சி தொடர காரணம் திராவிட முன்னேற்றக் கழகம் தான். திமுக, அதிமுக கட்சியில் இருந்து விடுபட்டால்தான் தமிழகத்திற்கு பொற்காலம்.
ஆசிரியர் குருமூர்த்தி 30 வருடங்களுக்கு முன்பே என்னை பிஜேபி கட்சியில் சேர்த்து விடுவதாக என்னிடம் சொன்னார், தற்போதும் அவர் அந்த கட்சியில் மிகமிக முக்கியமான இடத்தில் நெருக்கமாக இருக்கிறார். தமிழகத்தில் பிஜேபியை வளர்ப்பதற்கு இன்னோரு கட்சியின் துணையோடு வராதீர்கள்.
பிரதமர் மோடி எங்கு பேசினாலும் ஊழலை அறவே ஒழிப்போம் என சொல்லிக்கொண்டு இருப்பவர். அப்படிருக்கும் போது, எந்த அடிப்படையில் தமிழகத்தில் ஆட்சியை நீடிக்க வைக்கிறீர்கள். இந்த ஆட்சி இப்படியே நீடித்தால், நடந்து முடிந்த இடைத்தேர்தலில் ஓட்டுக்கு 2000 ரூபாய் கொடுத்தவர்கள் அடுத்த சட்டமன்ற தேர்தலில் 4,000 ரூபாய் கொடுப்பார்கள். இப்படி இருந்தால் ஜனநாயகத்தை நம்பி தேர்தலில் நிற்கும் புதியவர்களுக்கு இது பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும். ஆட்சியை கலைப்பது ஒன்றும் சிரமம் இல்லை, தமிழகத்தில் உள்ள 10 அமைச்சர்களை திடீர் ரெய்டு நடத்துங்கள், அவர்களிடம் இருக்கும் பணத்தை பறிமுதல் செய்தால் அதை என்னுவதற்கே ஆயுள் முழுவதும் செலவு செய்ய வேண்டியிருக்கும். அதன் பிறகு ஆட்சியை கலைத்து விட்டு 6 மாதம் ஜனாதிபதி ஆட்சி நடத்துங்கள், அது உங்கள் ஆட்சித்தானே ! அப்போது தமிழக மக்களுக்கு நீங்கள் எவ்வளவு நல்லவிசயங்கள் செய்யமுடியோ அதை செய்யுங்கள். இதன் பிறகு தேர்தல் வந்தால் அதிமுக வாக்குக்கு பணம் கொடுக்காது, இதை தெரிந்து கொண்ட திமுகவும், பணத்தை கொடுக்க மாட்டார்கள். அப்போது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள புதியவர்கள் போட்டியிட்டு ஆட்சியில் உட்காருவார்கள், இந்த திராவிட கட்சிகளை விரட்டி முடியும் என்றார். முதலில் இந்த அதிமுக ஆட்சியை கலையுங்கள்" என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு வேண்டுகோள் வைத்தார்.
கடைசியாக பேசிய துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, ரஜினிகாந்த் மூலம்தான் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும் என்று உரையை தொடங்கினார். தமிழகத்தில் அதிமுக, திமுக இல்லாத ஒரு அரசியல் மாற்றத்தை ரஜினிகாந்த் மூலம்தான் ஏற்படுத்த முடியும் என்று சோ ஒரு முறை என்னிடம் கூறினார். பிஜேபியிடம் தமிழகத்தில் ஆட்சியை கலைக்குமாறு நான் சொல்ல முடியாது. நான் சொல்வதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது தெரியவில்லை. பதவியில் இருப்பவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.
சசிகலா முதல்வர் ஆவதற்கான பணிகள் நடைபெற்று வந்த பொழுது ஓபிஎஸ் என்னிடம் வந்தார். இப்படி எல்லாம் நடக்கிறது என்று சொன்ன பொழுது அவரிடம் நான் கூறியதை அப்படியே கூற முடியாது.. நீங்கள் எல்லாம் ஆம்பளையா, எதுக்கு இருக்கீங்க என்று கேட்டேன். நான் கூறியதால் தான் பன்னீர்செல்வம் சமாதியில் அமர்ந்து தியானம் செய்து அதன் மூலம் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒருங்கிணைத்தேன்.
ஜெயலலிதாவை ஏற்ற அக்கட்சியினர் சசிகலாவை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆட்சியை கலைத்து ஆறு மாதத்தில் எதுவும் மாறிவிடாது. மறுபடியும் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் என்ன செய்வது. முழுவதும் குடும்ப அரசியலாக மாறிவிடும். ஊழல் தலைவிரித்தாடும். இவை அனைத்திற்கும் மாற்றாக நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு வரவழையுங்கள். தமிழக அரசியலில் புது மாற்றம் ஏற்படும்" என்றார்.