கோவில்பட்டி யூனியன் சேர்மன் தேர்தலில் அ.திமு.க.வின் கஸ்தூரி வெற்றி. மறியலில் தி.மு.க. கவுன்சிலர்கள் அடிதடி தீக்குளிக்க முயற்சி. 19 வார்டுகளைக் கொண்ட கோவில்பட்டி யூனியனில் தி.மு.க. 8 கூட்டணியான சி.பி.ஐ. 1 என 9 பேர் தேர்வானர் என்ற நிலையில் பெருபான்மைக்குத் தேவையான ஒரு கவுன்சிலர் வேண்டிய நிலையில் தி.மு.க. தரப்பு சேர்மன் பதவியை வசமாக்க 2 சுயேட்சைக் கவுன்சிலர்களை வளைத்து 11 என்ற பெரும்பான்மைத் தக்க வைத்தது.
அதேசமயம் அ.தி.மு.க. தரப்பிலோ அ.தி.மு.க கவுன்சிலர்கள் 5 கூட்டணி தே.மு.தி.க. சேர்த்து 6 கவுன்சிலர்கள் என்றான போது சுயேட்சை கவுன்சிலர் 2 பேர்களை தங்கள் பக்கம் கொண்டு வர அ.தி.மு.க. விற்கு 8 என்ற எண்ணிக்கை. சேர்மன் பதவியைப் பெற 2 கவுன்சிலர் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 11ம் தேதியன்று நடந்த சேர்மன் தேர்தலில் தி.மு.க.வின் பலம் 11, என்ற நிலையில் அ.தி.முக.வின் பலம் 8 ஆக இருந்தது. அது சமயம் திடீர் ட்விஸ்ட்டாக தேர்தல் நடத்த வேண்டிய அதிகாரியான ஜெயசீலனுக்கு திடீர் நெஞ்சுவலி. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் காரணமாக தேர்தல் ஒத்திவைப்பு என அறிவிக்கப்பட்டது.
அதன்பின் ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் ஜன 30 ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது இன்றைய தினம் கோவில்பட்டி யூனியனில் பரபரப்பு. போலீஸ் காவல் டைட் செய்யப்பட்டது. சரியாக காலை பத்து மணியளவில் தி்.மு.க. அ.தி.முக. கவுன்சிலர்கள் யூனியன் அலுவலகம் வந்தனர். தேர்தல் அதிகாரியான மாவட்டப் பஞ்சாயத்தின் இணை இயக்குனர் உமாசங்கர் வருகைப் பதிவேட்டைப் பதிவு செய்தார்.
பின்னர் அ.தி.முக. தரப்பில் சேர்மன் வேட்பாளர் கஸ்தூரியும், தி.மு.க. தரப்பில் பூமாரியும் சேர்மன் வேட்பாளருக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர். பின்னர் 11.00 மணியளவில் வாக்குப் பதிவு நடந்தது. இதில் தி.மு.க. பக்கமிருந்த 11 கவுன்சிலர்களில் 16- வது வார்டு தி.மு.க. கவுன்சிலரான அன்புக்கரசி அ.தி.முக. விற்கு அணி தாவி வாக்களித்தாராம். ஆனாலும் தி.மு.க. தரப்பிற்கு பெரும்பான்மை பலமாக 10 இருந்தது.
பின்னர் நடத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் அ.தி.மு.க. தரப்பிற்கு 10 வாக்குகள் தி.மு.க. தரப்பிற்கு 9 வாக்குகளும் கிடைத்ததால் அ.தி.மு.க.வின் கஸ்தூரி சேர்மன் என்று தேர்தல் அதிகாரி உமாசங்கர் அறிவிக்க, அரங்கில் பரபரப்பு தி.முக. கவுன்சிலர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

அரிபுரியில் அ.தி.மு.க. கஸ்தூரி சேர்மன் என அதிகாரி பதிவு செய்ய, தி.மு.க. கவுன்சிலர்களோ நாங்கள் 10 பேர் தி.மு.க.விற்கு வாக்களித்தோம். இதோ ஒன்றாக உள்ளோம். வாக்குச் சீட்டை எங்களிடம் காட்டுங்கள். இல்லையேல் மறு எண்ணிக்கை நடத்தப்படவேண்டும் என்ற தி்.மு.க கவுன்சிலர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.
பெரும்பான்மை பலம் எங்கள் பக்கம்தான் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக அதிகாரி மாற்றி அறிவிக்கிறார். மறுதேர்தல் நடத்தப்படவேண்டும்.என்ற கோரிக்கையோடு தி.மு.க. கவுன்சிலர்கள் 10 பேர்களும் சாலைமறியலில் ஈடுபட, உடன் தி.முக.வினரின் கூட்டம் திரண்டது.
யூனியன் சாலை பதட்டமானது. மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸ் விரட்டியடித்த பிறகும் தி.மு.க.வினர் சாலை மறியலைக் கைவிடவில்லை. எங்கள் கட்சியின் கவுன்சிலர் அன்புக்கரசி அணி மாறினாலும் எங்கள் பலம் 10. நாங்கள் தி.மு.க.வுக்கு வாக்களித்தோம். இதோ ஒன்றாக உள்ளோம். ஆளுங்கட்சிக்குச் சாதகமாக தேர்தல் அதிகாரி மாற்றி முறைகேடாக அறிவிக்கிறார். எங்கள் கோரிக்கையை அவர் ஏற்கவில்லை. நாங்கள் நீதிமன்றம் செல்வோம் என்கிறார் கவுன்சிலர் பாரதி.

ஸ்பாட்டுக்கு வந்த எம்.பி.கனிமொழியும், மா.செ.கீதாஜீவனும், ஆளுங்கட்சி தனக்குச் சாதகமானவரை தேர்தல் அதிகாரியாக நியமித்துள்ளனர். முறைகேடாக அறிவிக்கிறார்கள். எங்களிடம் 10 கவுன்சிலர்கள் உள்ளனர். நாங்கள் தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் என்றனர் மறியலில் இருந்தவாறு.
முறைகேடான அறிவிப்பைக் கண்டித்து சரவணன் என்பவரும் வயதான அவரது தாய் லட்சுமி இருவரும் தீக்குளிக்க முயன்றது தடுக்கப்பட்டது. கோரிக்கை ஏற்காத வரை எங்களின் சாலை மறியல் போராட்டம் தொடரும் என்கிறார்கள் தி.மு.க. தரப்பினர். பதற்றமும், உஷ்ணமும் பரவுகிறது கோவில்பட்டி ஏரியாவில்.