சாத்தான்குளம் லாக்கப் இரட்டை கொலையில் காவலர்கள், 'Friends of Police', அதிமுக்கிய துறையில் உள்ளவர், கோவில்பட்டி கிளைச் சிறைச்சாலை அதிகாரிகள், கோவில்பட்டி அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளதாக, அப்துல் கலாம் லட்சிய இந்தியா இயக்கத்தின் தலைமை வழிகாட்டி, வெ.பொன்ராஜ் கூறியிருக்கிறார்.
‘தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இரு அப்பாவிகளை, ஈவு இரக்கமின்றி, வன்முறைத் தாக்குதல் நடத்திக் கோரமாக அடித்துத் துன்புறுத்தி, மன உளைச்சலுக்கு ஆளாக்கி, செய்யாத தவறுக்கு பலியாக்கிவிட்டனர்.
குற்றம்சாட்டப்பட்ட நபருக்குக் கிடைக்க வேண்டிய அனைத்து ஜனநாயக வழிமுறைகளையும் படுகுழியில் தள்ளி, ஜனநாயக நடைமுறையைக் காலில் போட்டு மிதித்து, கடமையில் இருந்து தவறியிருக்கிறார்கள் அல்லது குற்றமிழைத்திருக்கிறார்கள்.
தொடர்ந்து இதே தவறு செய்யும் இரண்டு காவலர்களின் கை காட்டுதலுக்கு அடிமைப்பட்டு, ஜனநாயகப் படுகொலை செய்திருக்கிறார்கள் என்ற சந்தேகம் வலுத்திருக்கிறது. இவர்கள் அனைவர் மீதும், கொலை வழக்குப் பதிவு செய்து, சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடப்பதற்கு, முதல்வர் உத்தரவிடவேண்டும்.
அதே நேரத்தில், நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கையும், தமிழகம் முழுவதும் இதுபோல் நடந்த எண்ணற்ற கொடும் செயல்களையும், அப்பாவிகள் மீது காவல் துறையால் சித்திரவதைக்கு உள்ளாக்கி மரணமடைந்த வழக்குகளையும் எடுத்து, இனிமேல் அப்பாவி பொதுமக்களுக்கு இப்படி நடக்காத நிலையை, சட்டத்தை மாற்றும் நிலையை எற்படுத்தும் வகையில் நீதிவிசாரணை நடத்தி, அது தரும் பரிந்துரையை, இந்த ஆட்சி முடிவதற்குள் செயல்படுத்துவேன் எற்று உறுதி கூற முடியுமா? தாமதம் செய்யாதீர்கள்! விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு! என, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோளாக விடுத்துள்ளார்.