கடந்த எட்டு நாட்களாக நடந்த வருமானவரிச் சோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் குவிந்துள்ளனர். இதன் காரணமாக மருத்துவமனையில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை குறித்து பல்வேறு அமைச்சர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், “இன்று அதிகாலை 3 மணியிலிருந்து பார்த்திருப்பீர்கள். உதயநிதி ஸ்டாலின் ஓடோடி போய் பார்க்கிறார். சபரீசன் ஓடோடி போய் பார்க்கிறார். உதயநிதியாவது அமைச்சர்., சபரீசனுக்கு என்ன. அவர் ஏன் பார்க்கிறார். செந்தில் பாலாஜி இரண்டு ஆண்டு காலமாக தமிழகத்தினுடைய வருவாயை, ஆயிரக்கணக்கான கோடி பணங்களை கொள்ளையடித்து அந்த கொள்ளையடித்த பணத்தின் மூலமாக, ஆணவத்தின் மூலமாக, அதிகாரத் திமிர் மூலமாக வருமான வரித்துறையினர் அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது அந்த வருமானவரித்துறை அதிகாரிகளை மடக்கி அடித்து உதைத்து தாக்கி இருக்கிறார். குறிப்பாக அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய தேசத்திற்கு தங்கத்தை பெற்றுக் கொடுத்த ஒரு விளையாட்டு வீராங்கனை காயத்ரி என்கின்ற அதிகாரியை அடித்திருக்கிறார்கள்.
வலது கையை முறுக்கி இருக்கிறார்கள். அவரை தொடக்கூடாத இடங்களில் எல்லாம் தொட்டிருக்கிறார்கள். ஏதோ நானாக சொல்லவில்லை. இது அவர் கொடுத்திருக்கிற புகாரில் சொல்லப்பட்டது. காயத்ரி என்பவர், ‘என்னை தொடக்கூடாத இடத்தில் தொட்டு என்னைத் தாக்கினார்கள்’ என சொல்லி இருக்கிறார். அப்படிப்பட்ட நிலையில் இன்று தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீரழிந்துள்ளது. சட்டத்தை மதிக்கத் தெரியாத முதலமைச்சர் அவரின் கீழே பணியாற்றிக் கொண்டிருக்கும் அமைச்சர்கள் இன்றைக்கு செந்தில் பாலாஜிக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு வருகிறார்கள். இந்த அரசியல் தலைவர்கள் கூட்டணி தலைவர்கள் அன்று வருமானவரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட போது எங்கே சென்றார்கள். பெண் அதிகாரி மானபங்கப்படுத்தப்பட்ட போது எங்கே சென்றார்கள். அன்று இந்த அரசு சட்டத்தை கடைப்பிடித்ததா?” என்றார்.