போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் அரசு சார்பில் இன்னும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தவில்லை. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சி.ஐ.டி.யு. சவுந்தரராஜன், “அரசிடமிருந்து பேச்சுவார்த்தைக்கான அழைப்பு ஏதும் வரவில்லை. அவர்கள் பேசத் தயாராக இருப்பது போன்றும், நாங்கள்தான் பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை என்பது போன்ற பொய் தோற்றத்தை மக்களிடத்தில் கொடுக்க முயற்சிக்கிறார்கள். எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் கட்டாயம் வருவதற்கு தயாராக இருக்கிறோம் என மக்களிடத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாநிலம் முழுவதும் பேருந்து நிலையங்களில் மறியல் போராட்டம் இன்று நடத்துவதற்கு காரணம் எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவதற்குத்தான். எங்கள் போராட்டத்தை உடைக்க அவர்கள் எடுத்துள்ள எல்லா விதமான அநீதியான சட்ட விரோத நடவடிக்கைகளே இதற்கு காரணம். முழுக்க முழுக்க வெளியாட்களை வைத்து, வாகனத்தை எடுத்துக் காட்டினால் போதும் என அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
ஒரே வண்டியை எடுத்து மூன்று வழித் தடங்களில் மாற்றி மாற்றி ஓட்டிக் காட்டி பேருந்துகள் முறையாக இயங்குகிறது எனும் தோற்றத்தை உண்டாக்க முயற்சிக்கிறார்கள். இதுவெல்லாம் மக்களை ஏமாற்றும் ஏற்பாடுகள். எங்களின் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றிவிட்டதாகக் கூட அவர்கள் ஒரு பொய்யை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
வரவுக்கும் செலவுக்குமான தொகையை இதுவரை அவர்கள் கொடுக்கவில்லை. 2022ம் ஆண்டு ஏப்ரலில் கொடுக்க துவங்கியிருக்க வேண்டிய தொகையை இன்னும் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால் இந்த கோரிக்கைகளே வந்திருக்காது” என்று தெரிவித்தார்.