குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் என புகார்கள் எழுந்த நிலையில், "குரூப்-4 தேர்வில் எழுந்துள்ள புகார் குறித்து பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்படும்" என சட்டப்பேரவையில் பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக அறிவித்தார். அதே வேளையில், குரூப் 4- க்கான தகுதியாளரின் அதிகபட்ச வயதே 40 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 46 வயது சிவராஜூ குரூப் 4 தேர்வில் எப்படி முதலிடம் பிடித்தார்..? என்ற குட்டு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசின் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு போட்டி தேர்வு நடத்தி அதன் மூலம் தகுதியுடைய நபர்களை தேர்ந்தெடுத்து அரசு பணிக்கு அனுப்புவது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பணி. நகராட்சி ஆணையர், வருவாய்க் கோட்டாட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதன்மைப் பணிகளுக்கான தேர்வினை நடத்துவது தொடங்கி கடை நிலை உதவியாளர் வரை பல்வேறு பிரிவுகளாக தேர்வினை நடத்தி வரும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களுடைய குரூப் 4 பிரிவு மூலம் வி.ஏ.ஒ- 397, ஜூனியர் அசிஸ்டெண்ட் 2688, பில் கலெக்டர் கிரேடு1- 34, பீல்டு சர்வேயர் 509, டிராப்ட்ஸ்மேன் 74, டைப்பிஸ்ட்- 1901 மற்றும் ஸ்டெனோ டைப்பிஸ்ட்- 784 உள்ளிட்ட 6 ஆயிரத்து 491 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 4 தேர்வினை அறிவித்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் 301 தாலுகா மையங்களிலுள்ள 5575 தேர்வு மையங்களில் சுமார் 17 லட்சம் நபர்கள் தேர்வினை எழுதினர். சமீபத்தில் தேர்ச்சிப் பெற்றோர் விபரம் அறிவிக்கப்பட பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளனர்.
இதில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் (1606) மற்றும் கீழக்கரை (1608) ஆகிய மையங்களில் தேர்வெழுதிய 40- க்கும் மேற்பட்டோர் மாநில அளவில் முதல் 100 இடங்களுக்குள் மதிப்பெண்ணை பெற்றதும், இன வாரியாக முதல் 50 இடங்களை பெற்றதும் கண்டுப்பிடிக்கப்பட்டது. வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நபர்கள் ஏன் இந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர்.? எவ்வாறு இந்த இரண்டு மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்கள் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்றனர்.?.
இந்த மையங்களில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று மாநில அளவில் இடம் பெற்றவர்களில் அநேகமான நபர்கள் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். தொலை தூரத்திலிருக்கும் தேர்வர்கள் இந்த தேர்வு மையங்களை தேர்ந்தெடுத்து தேர்வு எழுதிய காரணமென்ன..? என்ற பல சந்தேகங்கள் எழுந்த நிலையில், "மேற்கூறிய 40 தேர்வர்களும் சென்னை முதல் கன்னியாகுமரி மாவட்டத்தினை சேர்ந்தவர்கள். இந்த மையத்தில் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஒட்டுமொத்த தரவரிசை அடிப்படையில் முதல் 1000 இடங்களில் 40 தேர்வர்களும், முதல் 100 இடங்களில் 35 தேர்வர்களும் உள்ளனர்." என ஒப்புக்கொண்டதோடு," விசாரணை நடைப்பெற்று உண்மை நிலை அறிவிக்கப்படும்" என்றது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
இது இப்படியிருக்க, சர்ச்சைக்குரிய இதே குருப் 4 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த சிவகங்கை மாவட்டம் மேலக்கண்ணனூரை சேர்ந்த சிவராஜூவின் வயது 46 (பிற்படுத்தப்பட்ட வகுப்பு) என தகவல் வெளியாக, கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு அதிகபட்ச வயது 30 ஆகவும், ஸ்டெனோ டைப்பிஸ்ட் கிரேடு 3, டைப்பிஸ்ட், டிராப்ட்ஸ்மேன், பீல்டு சர்வேயர், பில் கலெக்டர் கிரேடு 1, ஜூனியர் அசிஸ்டெண்ட் மற்றும் ஜூனியர் அசிஸ்டெண்ட்பணியிடங்களுக்கு 32 ஆகவும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டும், ஒரு சிலருக்கு வயது வரம்பில் தளர்வும் வரையறுக்கப்பட்ட நிலையில் 46 வயது நபரை தேர்வெழுத அனுமதித்து எப்படி..? அவருக்கு உடந்தையாக இருந்தது யார்..? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.