Skip to main content

டாஸ்மாக் கடைகள் வருமானத்தில் தான் ஆசிரியர்களுக்கு சம்பளம்! - அமைச்சரின் பேச்சால் ஆசிரியர்கள் அதிர்ச்சி!

Published on 26/08/2018 | Edited on 27/08/2018
minister kc


வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்னமூக்கனூரில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் ஜோலார்பேட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அமைச்சர் வீரமணி பேசி கொண்டு இருக்கும்போது தீடீரென அதிமுக தொண்டர் ஒருவர் மது போதையில் ரகளையில் ஈடுபட்டார்.

அந்த அதிமுக தொண்டரால் பாதியில் பேச்சை நிறுத்திய அமைச்சர் போலீஸ் போலீஸ் என்று அழைத்து அவரை அப்புறப்படுத்த சொன்னார். அதன்பின் தனது பேச்சை தொடர்ந்தார். அப்போது அமைச்சர் ’டாஸ்மாக் கடை விற்பனை லாபத்தால் தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுத்து கொண்டு இருக்கிறோம்’ என்றார். அமைச்சரின் இந்த பேச்சு ஆசிரியர்கள் மற்றும் கட்சியினர், பொதுமக்கள் இடையே முகம் சுழிக்க வைத்ததோடு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

சார்ந்த செய்திகள்

Next Story

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களின் விண்ணப்பதாரர்களுக்கு; முக்கிய அறிவிப்பு வெளியீடு

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
 Important announcement For candidates of secondary teaching posts

அரசுப் பள்ளிகளில் 1768 காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி அறிவித்த நிலையில், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. 

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர் 2024 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டு விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 15.03.2024 மாலை 5.00 மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டது. 

இந்நிலையில், விண்ணப்பதாரர்கள் பலரும் இணையவழியாக விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளனர். அதனடிப்படையில் மேற்கண்ட பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி 15.03.2024இல் இருந்து 20.03.2024 மாலை 5.00 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளவும் அவகாசம் வழங்க கோரியதின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் 21.03.2024 முதல் 23.03.2024 மாலை 5.00 மணி வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரர்கள் திருத்தங்கள் மேற்கொள்ளும்போது கீழ்க்காணும் வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறது. இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பித்து தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மட்டுமே தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை திருத்தம் செய்து புதுப்பித்தவுடன், முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரைக்கும் உள்ள ‘சமர்ப்பி’ பொத்தானை அழுத்தி விண்ணப்பத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை உறுதி செய்யவேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் செய்யப்பட்ட மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. கடைசியாக உள்ள சமர்ப்பி பொத்தானை அழுத்தி உறுதி செய்யவில்லை எனில், அவர்களின் விண்ணப்பம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. முந்தைய விவரங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் மாற்றங்களை செய்து விண்ணப்பத்தை சமர்ப்பித்தபின் அதில் எந்த மாற்றங்களையும் செய்யக்கூடாது.

திருத்தம் மேற்கொள்ளும் விண்ணப்பதாரர்கள், திருத்தம் மேற்கொள்ளும் குறிப்பிட்ட இடத்தில் உரிய திருத்தம் மேற்கொண்ட பின்பு தொடர்ச்சியாக அடுத்த பகுதிகளையும் சரிபார்க்க வேண்டும். ஏனெனில் சில பகுதிகளில் திருத்தம் செய்யும்பொழுது, மற்ற பகுதிகளிலும் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும். திருத்தம் செய்த பின்னர் Print Preview Page சென்று அனைத்தும் சரியாக உள்ளபட்சத்தில் Declaration-ல் ஒப்புதல் அளித்த பின்னரே தங்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் எந்தவொரு மாற்றமும் செய்யவில்லை எனில் முந்தைய தரவுகளே பரிசீலிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றில் மாற்றங்கள் செய்ய இயலாது. இனம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சார்ந்த விவரங்களில் திருத்தம் இருப்பின் விண்ணப்பதாரர் செலுத்திய கட்டணத் தொகையில் ஏற்படும் மாற்றங்களுக்கு விண்ணப்பதாரரே பொறுப்பாவார்.

விண்ணப்பத்தில் கட்டணத்தொகையில் திருத்தம் செய்ய வேண்டியிருப்பின் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர் தேர்வுக்கான முழு கட்டணத்தொகையினை மீண்டும் செலுத்த வேண்டும். விண்ணப்பத்தில் கட்டணத்தொகையில் திருத்தம் செய்யும் போது குறைவாக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பின், விண்ணப்பதாரர் ஏற்கெனவே செலுத்திய கட்டணத்தின் மீதித்தொகை திரும்ப வழங்கப்படமாட்டாது. மேலும், இனிவரும் காலங்களில் திருத்தம் தொடர்பாக எவ்வித கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“விதிமீறலில் ஈடுபட்ட டாஸ்மாக் பார்” - குரல் கொடுத்த குடிமகன்!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Tasmac Bar Irregular  Citizen Speaks Out

டாஸ்மாக் பாரில் மது அருந்தியபடியே நம்மைத் தொடர்புகொண்ட ஒருவர், “அண்ணே.. போதையெல்லாம் இறங்கிப்போச்சு..” என்று பேசினார். ‘கலப்படச் சரக்கா? என்ன விஷயம்?’ என்று கேட்டோம். “அதெல்லாம் இல்ல. டாஸ்மாக்ல 21 வயசுக்கு குறைவா உள்ளவங்களுக்கு சரக்கு விற்கக் கூடாதுன்னு சட்டம் சொல்லுது. ஆனா இந்த விருதுநகர் பார்ல (கடை எண் 11881) டவுசர் போட்ட சின்னப் பையனை வேலைக்கு வச்சிருக்காங்க. சிறுவன் தான் டேபிள் டேபிளா போயி பாட்டில வச்சிக்கிட்டிருக்கான். அவன் சின்னப் பையன்ங்கிறதுனால சரக்கடிக்க வந்தவங்க ஆளாளுக்கு அவனை விரட்டி வேலை வாங்குறாங்க. கண்டபடி திட்டுறாங்க.

பாக்குறதுக்கு பரிதாபமா இருக்கு. குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுக்க சட்டம் இருக்கு. டாஸ்மாக் சட்டம் வேற இருக்கு. ஆனா பாருங்க சட்டமீறலா இங்கே அநியாயம் நடக்குது. மனசு பொறுக்காமத்தான் ஒருத்தர்கிட்ட நக்கீரன் நம்பரை வாங்கி உங்ககிட்ட பேசுறேன். நான் ஒரு குடிமகன்தான். ஆனாலும் எனக்கும் மனசாட்சி இருக்குல்ல. அந்தப் பையனோட எதிர்காலத்த நெனச்சா ரொம்ப வேதனையா இருக்கு. உங்க வாட்ஸ்-ஆப் நம்பருக்கு போட்டோ எடுத்து அனுப்பிருக்கேன் சார்.” என்று நா தழுதழுக்கப் பேசினார்.

Tasmac Bar Irregular  Citizen Speaks Out

மது அருந்தினாலும் ஒரு பொறுப்புள்ள இந்தியக் குடிமகனாக நடந்துகொண்ட அந்த நபர், நம்மிடம் தன் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. விருதுநகர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ரவிச்சந்திரனை தொடர்புகொண்டு விஷயத்தைச் சொன்னோம். “உடனே அங்கே போய் பார்த்து விசாரிச்சு நடவடிக்கை எடுக்கிறேன்.” என்று உறுதியளித்தார்.