தமிழகத்தில் வீடு வீடாகச் சென்று கரோனா அறிகுறி உள்ளதா என இது வரை 3,96,147 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டதாகச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக பல்வேறு இடங்களில் தீயணைப்பு வீரர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் கரோனா உறுதிசெய்யப்பட்டவர்களை கொண்ட சென்னை, மதுரை, ஈரோடு, நெல்லை, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் உள்ளதா என நேற்று (30/03/2020) ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கரோனா உறுதி செய்யப்பட்டோர் வசித்த பகுதிகளில் 7 கி.மீ வட்டத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த 12 மாவட்டங்களில் 2,271 களப்பணியாளர்கள் மூலம் சுமார் 1,08,677 வீடுகளில் 3,96,147 நபர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. நோய்த் தொற்று கண்டறியப்பட்ட நபர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவரை தனிமைப்படுத்தும் பணி நடைபெறுகிறது.
தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ள நிலையில் ஆறு குணமடைந்துள்ளனர். இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.