உலகம் முழுவதும் இன்று தாய்மொழி தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் மூத்த மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியைக் கொண்டாடும் விதமாக தமிழக அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், “வங்கமொழி பேசும் மக்கள் மீது உருது மொழி திணிக்கப்பட்டதற்கு எதிராகப் போராடிய ஐந்து மாணவர்கள் 21.2.1952 ஆம் நாள் படுகொலை செய்யப்பட்டதை குறிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அவை தாய்மொழி நாளை கடைப்பிடிக்கிறது.
தாய்மொழியைக் காக்க விரும்புவோர் செய்ய வேண்டிய முதல் பணி, தாய்மொழி வழிக்கல்வியை காப்பதுதான். மொழிப்போர் நடத்திய தமிழ்நாட்டில் தாய்மொழிக் கல்விக்கு முன்னுரிமை இல்லை என்பது தலைகுனிய வேண்டியதாகும். தமிழ்க் குழந்தைகளின் அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானதாகும். தமிழ்நாட்டில் தமிழ் ஒரு கட்டாயப் பாடமாகக் கூட இல்லை என்கிற நிலையே இன்னும் நீடிப்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. இந்த நிலையை மாற்றி, எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்கிற நிலையை உருவாக்க பன்னாட்டு தாய்மொழி நாளில் உறுதி ஏற்போம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.