![Tamil Nadu Chief Minister inaugurated new houses for Sri Lankan Tamils through video](http://image.nakkheeran.in/cdn/farfuture/brFd-jqGXLDFE7W-kfnzqtCXO1xBnpICx8nU0NeRKJg/1663167852/sites/default/files/2022-09/n1098.jpg)
![Tamil Nadu Chief Minister inaugurated new houses for Sri Lankan Tamils through video](http://image.nakkheeran.in/cdn/farfuture/4tOlUU5HRwe5ykcqHj8MaIgQjS-nEurscQWIP3B7-xQ/1663167852/sites/default/files/2022-09/n1095.jpg)
![Tamil Nadu Chief Minister inaugurated new houses for Sri Lankan Tamils through video](http://image.nakkheeran.in/cdn/farfuture/_i4UL_u08T4mRBewL0X5a7mwdEVUf8tNgwyWsGE9epo/1663167852/sites/default/files/2022-09/n1097.jpg)
![Tamil Nadu Chief Minister inaugurated new houses for Sri Lankan Tamils through video](http://image.nakkheeran.in/cdn/farfuture/DHkyj2BHzbfH6pSSXB6ZkpKQzXq0JFDMf7IQ_y5cTf4/1663167852/sites/default/files/2022-09/n1096.jpg)
கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் மூலம் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் பெரும்பாலானோர் தமிழகத்திற்குள் தஞ்சம் புகுத்தனர். தமிழகம் வந்த இலங்கைத் தமிழர்கள் திண்டுக்கல், மதுரை உட்பட சில மாவட்டங்களில் உள்ள முகாம்களில் தங்க வைப்பட்டனர். பல வருடங்களாக தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசும் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறது.
இந்நிலையில் அகதிகள் முகாமில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று திமுக அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து அதற்கான கட்டுமான பணிகளும் பல மாவட்டங்களில் நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அடியனூத்து, தோட்டனூத்து, கோபால்பட்டி ஆகிய முகாம்களில் வசிக்கக் கூடிய இலங்கை தமிழர்களுக்கு 17.17 கோடி செலவில் தோட்டனூத்து அருகே அனைத்து அடிப்படை வசதிகளுடன் 321 வீடுகள் எட்டு மாதத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த வீடுகளை முதல்வர் நேரில் வந்து திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் திடீரென வேலைப் பளுவின் காரணமாக முதல்வர் நேரடியாக வர முடியாததால் காணொளி காட்சி வாயிலாக வீடுகளை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து பயனாளிகள் மூன்று பேரு க்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் வீட்டுச் சாவியை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விசாகன் நன்றி கூறினார்.
இந்த விழாவில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார். வேடச வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன். திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், முன்னாள் ஒன்றிய தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் தண்டபாணி, ஊராட்சி மன்ற தலைவர் இந்திராராதா, மாநகர கிழக்கு பகுதி செயலாளர் ராஜேந்திரகுமார்,மேற்கு பகுதி செயலாளர் அக்கு, வடக்கு பகுதி செயலாளர் ஜானகிராமன், தெற்கு பகுதி செயலாளர் சந்திரசேகர் உட்பட கட்சி பொறுப்பாளர்களும், அதிகாரிகளும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.