![“Snakes must remain alive for the balance of nature” - Snake savior Jeevan Arulsamy!](http://image.nakkheeran.in/cdn/farfuture/ww16lKrpQo_1DHW--KpI_05EH0PkmIlmI2Y7uTTBw_M/1739170668/sites/default/files/inline-images/Snake2.jpg)
பாம்பு என்றாலே படையே நடுங்கும் என்பது பொதுவாக தமிழகத்தில் சொல்லப்படுவதுண்டு. ஆனால் பாம்புகளும் உயிர்கள் தான் அவையும் கொல்லப்படாமல் உயிர் வாழ வேண்டும். இயற்கை சமநிலையோடு இருக்க பாம்புகள் அவசியம் என்கிறார் சிவகங்கையைச் சேர்ந்த இயற்கை ஆர்வலரும், பாம்புகள் மீட்பருமான ஜீவன் அருள்சாமி.
சிவகங்கை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடுகளுக்குள் பாம்பு வந்துவிட்டால் ஜீவன் அருள்சாமியை அழைக்கிறார்கள். இவரும் அங்கே சென்று பாம்புகளை கொன்று விடாமல் லாவகமாக உயிரோடு பிடித்து அவற்றை காடுகளுக்குள் சென்று விட்டு விடுகிறார்.
இந்த தகவலை அறிந்து ஜீவன் அருள்சாமியை தொடர்பு கொண்டு பேசிய போது “சிவகங்கை சுற்று வட்டாரப் பகுதியில் கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், நல்ல பாம்பு என்ற நான்கு வகை விஷப்பாம்புகள் உள்ளது. மற்றபடி ஓலைப்பாம்பு, சாரைப்பாம்பு, பச்சைப்பாம்பு என்ற பல்வேறு வகையான பாம்புகள் விஷத்தன்மை அற்றவை. இவைகள் குடியிருப்பு பகுதிகளில் வந்தால் அதை அடித்து கொல்லுவதுண்டு. சிலர் பயந்து கொண்டு என்னை தொடர்பு கொள்வார்கள்.
நான் அங்கே சென்று விஷத்தன்மையிலான பாம்பா அல்லது விஷமற்ற பாம்பா என்பதை கண்டறிந்து அதை லாவகமாக பிடித்து அருகில் உள்ள காட்டுப்பகுதிகளில் விட்டு விடுவேன்.இதற்காக நான் எதுவும் பணம் பெற்றுக்கொள்வதில்லை. என்னுடைய பொருளாதார தேவைக்காக நான் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறேன். இயற்கையின் சமநிலையோடு இருக்க வேண்டும் என்றால் பாம்புகளும் உயிர் பிழைத்திருக்க வேண்டும் என்று நான் பிடித்த எந்த பாம்பையும் கொன்று விடாமல் அருகில் உள்ள காட்டுப்பகுதிகளில் விட்டு விடுகிறேன் என்றார்.
தீயணைப்பு துறையிலும், வனத்துறையிலும் பாம்பு பிடிக்க தன்னார்வலராக இருக்க விருப்பம் தெரிவித்து இருப்பதாக கூறும் ஜீவன் அருள்சாமி தன்னார்வலராக சிவகங்கை சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள பாம்புகளை கொல்லாமல் பிடித்து காடுகளுக்குள் விட்டு பிரபலம் அடைந்து வருகிறார்.