திருச்சி பூ சந்தைக்கு அடுத்து, புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பூ சந்தை பெரிய சந்தையாக உள்ளது. ஒரு நாளைக்கு 10 முதல் 15 டன் வரை பூக்கள் விற்பனை செய்யப்படும். இந்த சந்தையும் செவ்வாய்கிழமை (இன்று) முதல் மூடப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், செரியலூர், சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம், மாங்காடு, வடகாடு, அணவயல், மேற்பனைக்காடு, குலமங்கலம், பனங்குளம் மற்றும் சுற்றியுள்ள சுமார் 25க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் அதேபோல திருவரங்குளம், ஆலங்குடி பகுதியில் உள்ள வம்பன் மழையூர் போன்ற சுமார் 100 கிராமங்களிலும் மலர்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது.
இப்பகுதியில் ஒரு நாளைக்கு சுமார் 10 முதல் 15 டன் வரை மல்லிகை, முல்லை, கனகாம்பரம், சம்பங்கி, ரோஜா, அரளி, பிச்சி, செண்டி உள்ளிட்ட பல்வேறு மலர்களும் உற்பத்தி செய்யப்படுகிறது. கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் மலர்கள் திருச்சிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பூ கமிஷன் கடைகளைக் கொண்ட கீரமங்கலத்தில் விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு பகுதியில் உள்ள கமிஷன் கடைகளுக்கு விவசாயிகள் நேரடியாக கொண்டுவந்து விற்பனை செய்துவிட்டு செல்கின்றனர். இங்கு புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மொத்த வியாபாரிகளும் சில்லரை வியாபாரிகளும் வந்து பூக்களை வாங்கிச் செல்கின்றனர்.
கடந்த சில மாதமாக கரோனா ஊரடங்கால் பூக்களின் விலை மிகவும் குறைந்து, ஒரு கிலோ ரூ. 5 வரை குறைவாக விற்பனை ஆனது. இதனால் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு கூட கிடைக்காமல் தவித்துவந்தனர். மேலும், பூக்கள் விற்பனை ஆகாமல் ஒரு நாளைக்கு சுமார் 3 டன் வரை குப்பையில் கொட்டிவந்தனர். இந்த நிலையில், கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் கரோனா பரவல் அதிகரித்து, உயிர்ப் பலிகளும் அதிகரித்துள்ளதால் 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் 24ஆம் தேதிவரை அனைத்து பூ கமிஷன் கடைகளையும் மூட பூ கமிஷன் கடை உரிமையாளர்கள் சங்கத்தில் முடிவெடுத்துள்ளனர். இதனால் ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 முதல் 15 டன்கள் வரை பூக்கள் செடியிலேயே வீணாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடமாக கஜா புயல் தொடங்கி கரோனா என தொடர்ந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுவருவதால், அரசு உரிய இழப்பீடு வழங்கினால் விவசாயிகள் கடன் தொல்லைகளில் இருந்து தப்பிக்கலாம் என்கிறார்கள் விவசாயிகள்.