![Jayakumar explanation on Palaniswami - Sengottaiyan issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/9lySRTXF67hGaR2sqDtvMC0_jdFT0kJLTY7THdWWr_w/1739166633/sites/default/files/inline-images/58_57.jpg)
அத்திகடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா கோவை அன்னூர் அருகே நேற்று(9.2.2025) நடைபெற்றது. இந்த விழாவில் விவசாயிகள், அதிமுக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர். ஆனால் அதிமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான செங்கோட்டையன் கலந்துகொள்ளாதது கட்சியினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “அத்திக்கடவு - அவிநாசி திட்டக்குழு நடத்திய பாராட்டு விழாவை நான் புறக்கணிக்கவில்லை; என்னை வளர்த்து ஆளாக்கிய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களின் படங்கள் வைக்கப்படாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அத்திக்கடவு திட்டத்தை கொண்டுவர 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா ரூ.3.72 கோடி நிதியளித்தார். ஆனால் திட்டப் பணிகளை தொடங்க அடித்தளமாக இருந்த தலைவர்களின் படங்கள் மேடையில் இல்லை” எனத் தெரிவித்திருந்தார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், “அத்திக்கடவு அவிநாசி திட்ட விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாகத்தான் நேற்று பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. விவசாய கூட்டமைப்பில் அனைத்து கட்சியை சார்ந்தவர்களும் இருக்கிறார்கள். 50 ஆண்டுக்கால கனவுத் திட்டம் என்பதால் அதற்காக போராடியவர்கள், சிறைக்கு சென்றவர்கள், உண்ணாவிரதம் இருந்தவர்கள் என பலரும் அந்த விவசாயிகள் கூட்டமைப்பில் உள்ளனர். அதனால் எந்த விதத்திலும் நேற்று நடந்த விழாவில் அரசியல் சாயம் இருக்கக் கூடாது என்பதற்காக விவசாயிகளால் நடத்தப்பட்டது. புகைப்படங்கள் இடம்பெறுவதற்கு இந்த நிகழ்வை அதிமுக ஏற்பாடு செய்யவில்லை. பாராட்டு விழாவில் அரசியல் கலக்கக்கூடாது என்பதால் படங்கள் வைக்கப்படவில்லை. அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேறியதற்கு ஜெயலலிதாவும் எடப்பாடி பழனிசாமியும் தான் காரணம்” என்று விளக்கமளித்துள்ளார்.