தமிழ்நாட்டில் கரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் உயர்ந்துவரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் முக்கியமாக வார இறுதி நாளும், விடுமுறை நாளுமான ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இன்று பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவைகள் இயங்காது. உணவகங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி. இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை. இன்றும், வார இறுதி நாட்களிலும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை வாடகை வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறைந்த அளவிலான மின்சார இரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வாகன சோதனையில் ஈடுபட்டிருக்கும் காவலர்களிடம் அவசியம் பயண சீட்டைக் காட்ட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு முடக்கம் காரணமாக இன்று தமிழ்நாடு முழுக்க 60,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.