சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், தனது ஆண் நண்பருடன் பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் ஆண் நண்பரைத் தாக்கிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பிலிருந்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் மற்றும் ஒரு நபரை ஒருவரை நேற்று இரவு (25-12-24) போலீசார் கைது செய்தனர் .
ஞானசேகரன் மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் திருட்டு வழிபறி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து தி.மு.க துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து, கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிகழ்வு நெஞ்சைப் பதற வைக்கிறது. இதே நபர் நீண்டகாலமாகப் பல மாணவிகளை பாலியல் ரீதியாக அச்சுறுத்தி வரும் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த குற்றவாளிக்கு உடனடியாகக் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.
பெண்களுக்கெதிரான எந்த வகை குற்றமாக இருப்பினும் அதைப் பொறுத்துக்கொண்டு இருக்காமல், துணிச்சலுடன் வெளிக்கொண்டு வருவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தித் தருவதும், அனைத்து தளங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்” என்று பதிவிட்டுள்ளார்.