சமீபத்தில் தமிழகத்தில் கள்ள லாட்டரி களின் விற்பனை அதிகம் உள்ளதாகவும், அதனால் பல குடும்பங்கள் சீரழிவதாகவும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டு பேசியிருந்தார். அவர் சுட்டிக் காட்டிய கள்ள லாட்டரி தொடர்பாக தமிழக டிஜிபி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காவல்துறை ஆணையர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் என அனைவருக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதன் அடிப்படையில் தமிழக முழுவதும் கள்ள லாட்டரி விற்பனை செய்யும் கும்பல்களை காவல்துறையினர் கைது செய்யும் நடவடிக்கை தற்போது தொடங்கியுள்ளது.
சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டும் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி போன்ற மாவட்டங்களில் கேரள மாநில லாட்டரிகளை வாங்கி விற்பனை செய்யக்கூடிய கும்பல்கள் தற்போது கைது செய்யப்பட்டு வருகின்றனர். மாதம் தவறாமல் இந்த கள்ள லாட்டரி கும்பல்கள், சிறப்பு தனி படையினருக்கு சரியாக கப்பம் கட்டுவதால் இதுவரை யாரும் கைது செய்யப்படாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது இந்தபிரச்சனை பூதாகரமாக வெடித்ததால், அவர்கள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டாலும் அதில் சம்பந்தப்பட்ட முக்கிய நபர்களை காப்பாற்றுவதில் இந்த தனிப்படையினர் கூறுதல் கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்களை கையில் இருந்து தப்பித்து கொள்வதற்கான அனைத்து உதவிகளையும் இந்த தனிப்படை காவல்துறையினர் செய்வது அம்பலம் ஆகியுள்ளது.
அதற்கு உதாரணமாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த மாதவன்(38), திருச்சி புத்தூர் வயலூர் ரோடு சர்ச் காலனியைச் சேர்ந்த மனோகர் என்கிற எஸ்.வி.ஆர் மனோகரிடம் கேரளா லாட்டரி சீட்டு ஒன்று வாங்கியுள்ளார். அந்த சீட்டுக்கு ரூ.25ஆயிரம் பரிசுத்தொகை விழுந்து உள்ளது. இந்த பரிசுத் தொகையை மனோகர் மற்றும் அவரது கூட்டாளிகள் மலைக்கோட்டை வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்த ரங்கராஜன்( 61) காளிமுத்து, பாஸ்கர், நெப்போலியன் ஆகியோர் சேர்ந்து ஏமாற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாதவன் கொடுத்த புகாரின் பேரில் மனோகர் மற்றும் ரங்கராஜன் ஆகிய இருவரும் பேரை கைது செய்தனர். தி.மு.க பிரமுகரான மனோகர், சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஜவுளி கடை, புத்தூர் நால் ரோடு சிக்னல் அருகே ஹோட்டல் வைத்து வெளி உலகை ஏமாற்றி வந்தாலும் இவரது மெயின் தொழில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி தான் ஆகும் . மாலை நேரத்தில் புத்தூர் நால்ரோடு பகுதியில் உள்ள அவருடைய கடையில் தான் பரிசுத்தொகை வழங்கப்படும் . ஜீயபுரம், சிறுகமணி, பெருகமணி கரூர், குளித்தலை, ஸ்ரீரங்கம், லால்குடி அரியலூர் வரை இவரது நெட்வொர்க் பரவி உள்ளது.
இதேபோன்று திருவரங்கம் அம்மா மண்டபம் ரோடு கீதாபுரம் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் (25) என்பவர் ,அம்மா மண்டபம் ரோடு புது தெரு பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரிடம் ஒரு லாட்டரி சீட்டு வாங்கி உள்ளார். அதற்கான பரிசு தொகையையும் செல்வம் நூதன முறையில் கொடுக்காமல் மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அரவிந்தன் கொடுத்த புகாரின்பேரில் திருவரங்கம் போலீசார் செல்வத்தை கைது செய்தனர். மேலும் எடமலைப்பட்டி புதூர் போலீசார், வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்து பரிசுத்தொகையை கொடுக்காமல் ஏமாற்றிய திருச்சி கல்லாங்குளம் நாயக்கன் தெரு பகுதியை சேர்ந்த கணபதி (72) ராமச்சந்திர நகர் பகுதியைச் சேர்ந்த நாராயணன் (65) ஆகிய இரண்டு பேரையும் எடமலைப்பட்டி புதூர் போலீசார் கைது செய்தனர்.
அரியமங்கலம், காட்டூர், அண்ணா வளைவு, திருவெறும்பூர், துவாக்குடி, தஞ்சாவூர் இந்த லைனில் வேதாரண்யம் வரை மற்றொரு பெரிய நபர் காவல்துறையில் சிக்காமல் தொடர்ந்து லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. எஸ்.வி.ஆர் மனோதரன் ஏற்கனவே பலமுறை சிறை சென்றவர் என்பதும், குண்டாசு வழக்கில் சிறை வாசம் இருந்து வந்தாலும் தொடர்ந்து தனது லாட்டரி வியாபாரத்தை நடத்தி வருகிறார். ஆனால், இந்த லாட்டரி விற்பனையில் எஸ்.வி.ஆர் கைது செய்யப்பட்டாலும் அவருக்கு கீழ் இருக்கக்கூடிய மற்ற தலைகளில் மிக முக்கியமான கலியமூர்த்தி என்பவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. மேலும் கலியமூர்த்தியைப் போல இன்னும் சில முக்கிய லாட்டரி வியாபாரிகள் கைது செய்யப்படாமல் திருச்சி தனிப்படையினரால் தப்பிக்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த விஷயம் காவல்துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதோடு இவர்களிடமிருந்து மாதம் தவறாமல் பணம் பெற்றவர்களின் பட்டியலும் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அவர்கள் மீதான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.