தந்தை பெரியாரின் 51வது நினைவு தினம் இன்று (24.12.2024) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியாரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர் இராதா மன்றத்தில் பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மையத்தை முதல்வர் திறந்து வைத்தார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதே போல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 37-ஆவது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி சாமி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று எ.ஜி.ஆருக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் பெரியார் மற்றும் எம்.ஜி.ஆரை நினைவுபடுத்தும் விதமாகத் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பெரியார் பற்றிய பதிவில், “சமூகத்தில் தென்படும் இழிநிலையைச் சகித்துக்கொள்ளாதவர் தந்தை பெரியார். உயர்வு தாழ்வற்ற சமநிலை மனிதர்களுக்கிடையே நிலவ வேண்டும் என்பதற்காகத் தன் வாழ்நாளையே செலவிட்டுப் பரப்புரை செய்தவர். தன் சொற்களுக்குப் பொருத்தமாக வாழ்ந்தும் காட்டியவர். கொண்ட கொள்கையை இறுதிவரை எடுத்தியம்பிய தந்தை பெரியாரின் நினைவு நாளில் அவரது வழிகாட்டுதல்களைக் கைக்கொள்வோம். பாரபட்சமில்லாத சமூகம் நோக்கி வளர்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர் பற்றி, “நான் குழந்தையாகத் தவழ்ந்த நேரத்தில் மடி ஒன்றைக் கொடுத்தவர்; நான் சிறுவனாக சினிமா புகுந்த காலத்தில் நட்சத்திரமாக முன்னோடியவர்; மக்கள் மனம் கவர்வதில் எனக்கு மானசீகப் பாடம் நடத்தி ஆசிரியர் ஆனவர். அன்புக்கும் மரியாதைக்குமுரிய உறவாக நிலைத்துவிட்ட எம்.ஜி.ஆரின் நினைவு நாள் இன்று. எந்நாளும் மறையாத நினைவுகளைத் தந்தவரை இந்நாளில் வணங்குகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.