சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், தனது ஆண் நண்பருடன் பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர், அந்த ஆண் நண்பரைத் தாக்கிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பிலிருந்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரனை நேற்று இரவு (25-12-24) போலீசார் கைது செய்தனர் . ஞானசேகரன் மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் திருட்டு வழிபறி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அண்ணா பல்கலைகழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் இன்று (26-12-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. எஃப் .ஐ.ஆர் எப்படி வெளியே கசிந்தது?. காவல்துறையினரை தவிர அந்த எஃப்.ஐ.ஆரை யார் வெளியே விட முடியும்?. ஒரு படிக்காதவர் எழுதினால் கூட அந்த எஃப் .ஐ.ஆரை ஒழுக்கமாக எழுதியிருப்பார். ஏதோ அந்த பெண் குற்றம் செய்த மாதிரி எஃப் .ஐ.ஆர் எழுதியிருக்கிறார்கள். அந்த பெண்ணின் பெயர், செல்போன் எண், தந்தை பெயர், ஊர் பெயர் இதெல்லாம் எழுதியிருக்கிறார்கள். இதற்கெல்லாம் போலீஸ் வெட்கப்பட வேண்டும். திமுகவில் யாரேனுக்கும் மரியாதை இருந்தால் வெட்கப்பட வேண்டும். அந்த குடும்பத்தையே நாசம் பண்ணிடீங்க. இந்த கட்சி பொறுப்பில் இருப்பதனால் நான் மரியாதையாக பேசிக் கொண்டிருக்கிறேன். வீதிக்கு தனி மனிதனாக வந்தால் வேறு மாதிரி ஆகிடும்.
திமுகவில் பொறுப்பில் இருந்ததால் அவனை போலீஸ் செக் பண்ணவில்லை. அப்படி செக் பண்ணாததால் அவன் தைரியமாக வெளியே வந்திருக்கிறான். அந்த எஃப் .ஐ.ஆரை படித்தால் ரத்தம் கொதிக்கிறது. தமிழ்நாடு அரசியலில் யாராவது மக்கள் பிரச்சனைகளை பேசுகிறார்களா?. இந்த அரசியல் ஆகாது. அதனால், இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். சென்னையில் ஒரு ஆர்ப்பாட்டம் செய்ய வந்தால், முன்னாள் ஆளுநரை கைது செய்து உள்ளே வைத்திருக்கிறார்கள். பா.ஜ.கவினரை எத்தனை முறை கைது செய்வீர்கள்?. அதனால், இனிமேல் இந்த ஆர்ப்பாட்டம் வேலை எல்லாம் இல்லை. வேறு மாதிரி தான் உங்களை டீல் செய்ய போகிறோம். நாளையில் இருந்து பா.ஜ.கவினர் ஒவ்வொரு வீட்டில் முன்பு 10 மணியளவில் நின்று ஆர்ப்பாட்டம் செய்வார்கள். நாளை 10 மணியளவில் நான் என்னை 6 முறை சாட்டை அடித்துக்கொள்ள கூடிய நிகழ்வை என்னுடைய வீட்டிற்கு வெளியே நிகழ்த்தப் போகிறேன். நாளையில் இருந்து திமுக என்கிற கட்சி தமிழகத்தில் அகற்றப்படும் வரை செருப்பு அணிய மாட்டேன். நாளையில் இருந்து 48 நாட்கள் விரதம் இருக்கப் போகிறேன். பிப்ரவரி 2வது வாரம் இந்த விரதம் முடியும். ஆறுபடை வீட்டுக்கு நான் போவேன். முருகப்பெருமானிடம் முறையிட போகிறேன். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு இல்லாத மாநிலத்தில், எதற்கு உங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்?.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சிசிடிவி கேமரா இல்லை என்று சொல்ல வெட்கமாக இல்லையா?. நிர்பயா நிதி ஒதுக்கப்பட்டும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சிசிடிவி கிடையாது. சிசிடிவி கேமராவிற்கு ஒயர் இணைப்பு இல்லை என்று கூற வெட்கமாக இல்லையா? கேள்வி கேட்பது எங்கள் வேலை; பதிலளிப்பது அரசின் வேலை. நடுத்தர மக்கள் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு கொதித்து எழ வேண்டும். காவல்துறை எஃப் .ஐ.ஆரில் பெயர், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டுள்ளனர். விரச கதைகளை போல் காவல்துறை எஃப் .ஐ.ஆர் உள்ளது. நான் காவல்துறையில் இருந்திருந்தால் நடவடிக்கை வேறுவிதமாக இருந்திருக்கும்” எனப் பேசினார்.