சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி வெளியான படம் ‘புஷ்பா 2 - தி ரூல்’. இப்படத்தின் சிறப்பு காட்சி படம் வெளியாவதற்கு முந்தைய நாளான 4ஆம் தேதி ஹைதராபாத்திலுள்ள சந்தியா திரையரங்கில் இரவு திரையிடப்பட்டது. அப்போது அங்கு படம் பார்க்க காவல்துறையினரிடம் அல்லு அர்ஜூன் அனுமதி கேட்டிருக்கிறார். ஆனால் காவல் துறை கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது என அனுமதி தர மறுத்திருக்கின்றனர். அந்த சூழலில் அல்லு அர்ஜூன், ரோட் ஷோ நடத்தி அந்த திரையரங்கிற்குச் சென்றுள்ளார். அப்போது அவரைக்கான ரசிகர்கள் குவிந்தனர். அந்த கூட்ட நெரிசலில் ரேவதி(39) என்ற பெண் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் படுகாயமடைந்து மயக்கமான நிலையில் கீழே விழ, பின்பு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 14 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அந்த சிறுவன் கடந்த 18ஆம் தேதி மூளைச்சாவடைந்து கோமாவில் இருக்கிறார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையில் அல்லு அர்ஜுன் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்து, ரூ.25 லட்சம் இழப்பீடு தருவதாக அறிவித்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜூன் மீது காவல்துறையினர் வழக்கும் பதிவு செய்து கடந்த 13ஆம் தேதி அவரை கைது செய்தனர். இதையடுத்து அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் கொடுக்கப்பட்ட நிலையில் கைதான அன்றே அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமீன் கொடுக்கப்பட்டது. அல்லு அர்ஜுன் கைதான சமயத்தில் அவரைக் காண தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பலர் நேரில் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இந்த ஆதரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அல்லு அர்ஜுன் சில மணிநேரம் தான் சிறையில் இருந்தார். ஆனால், அவரைக் காண தெலுங்கு திரையுலகமே சென்றிருக்கிறது. அவருக்கு கை, கால், கிட்னி ஏதாவது போய்விட்டதா? எதற்காக இந்த ஆதரவுகள்? நெரிசலில் சிக்கி பலியான பெண்ணைக் குறித்தோ, சிகிச்சையில் இருக்கும் அவரது மகனைக் குறித்தோ இவர்கள் கவலைப்பட்டார்களா? என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சரமாரியாக சட்டசபையில் கேள்வி எழுப்பினார். இதற்கிடையே, அல்லு அர்ஜுன் வீட்டின் முன்பு உஸ்மானிய பல்கலைக்கழகத்தின் கூட்டு நடவடிக்கை குழு மாணவர் சங்கத்தின் சார்பில் உயரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் வீட்டின் முன் இருந்த பூந்தொட்டிகளை உடைத்து கல் வீச்சுகளிலும் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அல்லு அர்ஜுன் இன்று(24.12.2024) காலை 11 மணிக்கு ஆஜராக ஹைதராபாத் காவல்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் தற்போது சம்மனை ஏற்ற அல்லு அர்ஜுன் சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.