‘அரசியல் சடுகுடு’ என்ற தலைப்பில் நக்கீரன் நடத்தி வரும் நேர்காணலில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பலர் பேசி வருகின்றனர். அந்த வகையில் தி.மு.க கொள்கை பரப்பு மாநில துணைச் செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி, நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியது பற்றி தனது கருத்துகளை நம்மிடையே பகிர்ந்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் பெயரை ஏழு முறை உச்சரித்து அவர் கடவுளுக்கு நிகரானவரா என்று தனது பகை உணர்வையும் கொள்கையையும் வெளிப்படுத்தி இருக்கிறார். அம்பேத்கர் மற்றும் பெரியாரால் அடையாளம் காட்டப்பட்ட 3 சதவிகித பார்ப்பனர்கள் மனு தர்மம், சனாதனம், வர்ணாசிரமம் என்று சமஸ்கிருதத்தில் விதைத்துள்ளனர். அதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் நம்பிக்கை, ஐதீகம் என்று பௌதீகத்தைக் கொடுத்து நூற்றாண்டு காலம் திராவிட மானுட சமுதாயத்தை ஏமாற்றியுள்ளனர்.
கேரளாவில் கடந்த 12ஆம் தேதி வைக்கத்தில் மக்களின் உரிமைக்காகப் போராடிய தந்தை பெரியாரின் போராட்டத்திற்கான நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு மற்றும் கேரள முதலமைச்சர்கள் மானுட உரிமைக்கான முதல் போராட்டத்தைக் கொண்டாடி இருக்கின்றனர். வைக்கம் போராட்டத்தை முன்மாதிரியாக வைத்துத்தான் மகரு என்று சொல்லக்கூடிய மகாராஷ்டிராவில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியதாக அம்பேத்கர் சொல்கிறார். இந்த இரண்டு போராட்டத்தின் ஆயுளும் நூற்றாண்டைக் கடந்து விட்டது. இன்றைக்கு நூற்றாண்டை கடந்து தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் பெரியார் பேசப்படுகிறார். இந்தியா முழுவதும் அம்பேத்கர் பேசப்படுகிறார். எனவே நாடாளுமன்றத்தில் அவர் பெயரை உச்சரிக்கும்போது, மனுதர்மம், ராமாயணம், அனுமன் என்று சொல்லக்கூடிய குரங்கை வணங்கக் கூடிய ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பெற்ற பிரதிநிதிகளான மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் எப்படி அம்பேத்கரை ஏற்றிக்கொள்வார்கள்? அவர்களுக்கு அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும்போது கோபம் வரத்தான் செய்யும்.
இந்தியா முழுவதும் வாழ்கின்ற 97 சதவீதம் இருக்கக்கூடிய பார்ப்பனர் அல்லாத சமூக மக்கள் சார்பில் அமித் ஷாவிற்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்னனென்றால் இன்றைய தலைமுறை சனாதனம் என்றால் என்ன? பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்கள் செய்த சாதனை. அவர்களால் ஏற்பட்டிருக்கிற மானுட உரிமை, ஜனநாயகம் போன்றவற்றைத் தெரிந்துகொள்ள அமித் ஷா நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். தொடர்ந்து அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் பேச்சுக்கு இந்தியா கூட்டணிக் கட்சிகளும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து சாவர்க்கர், கோட்சே ஆகியோருக்கு சிலை ஏற்படுத்துவது, உத்தமர் காந்தியின் புகழையும் தியாகத்தையும் அழிப்பதையும் தான் சித்தாந்தமாகக் கொண்டுள்ளனர். அந்த சித்தாந்தத்திற்கு ஏற்ப அமித் ஷா அம்பேத்கரை அவமதித்திருக்கிறார். அந்த வகையில் அவருக்கு என் பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதே நேரத்தில் அந்த சித்தாந்தத்தை முன் வைத்து அமித் ஷா பேசியதற்கு எதிராக நாடாளுமன்றம் மட்டுமின்றி பொதுமக்களும் போராட்டத்தைக் கையில் எடுத்துப் போராடியுள்ளனர். இது 21 நூற்றாண்டில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.-வின் சித்தாந்தத்தைத் துடைத்து எறியக்கூடிய போராட்டத்தின் தொடக்கமாகப் பார்க்கிறேன். அவர்களுக்கு இளம் தலைமுறைகள் புதிய பாடத்தைக் கற்பிப்பார்கள்.
இன்றைக்கு இருக்கும் காங்கிரஸ் அம்பேத்கரை மதிக்காமல் இல்லை. நேரு காலத்தில்தான் அந்த நிலைமை இருந்தது. அதற்கு அடிப்படை காரணம் அன்றைக்கு இருந்த காங்கிரஸில் ஆர்.எஸ்.எஸ். சிந்தனை உடையவர்கள் இருந்தார்கள். சோனியா காந்தியை 2004ல் இந்தியாவின் மருமகளே பிரதமராக பொறுப்பேருங்கள் என்று கலைஞர் சொன்னதற்கு பிரணாப் முகர்ஜி, இத்தாலி நாட்டு பெண்மணி இந்தியாவிற்கு பிரதமராக இருக்கக் கூடாது என காங்கிரஸ் கட்சியில் இருந்துகொண்டு எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் காங்கிரஸில் இருந்தது. அது வேறு காலம். ஆனால் இன்றைக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சோனியா காந்தி வந்த பிறகு ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் உடையவர்களைத் தூக்கி எறிந்துவிட்டு மல்லிகார்ஜுன கார்கே போன்ற ஒடுக்கப்பட்டவர்களுக்கு தலைமை பொறுப்பு கொடுத்துள்ளனர். தொடக்கத்தில் இருந்த காங்கிரஸில் வேண்டுமானால் தவறுகள் நடந்திருக்கலாம். இன்றைக்கு காங்கிரஸில் ஆர்.எஸ்.எஸ். இல்லை. அம்பேத்கர் மற்றும் பெரியாரைத் தெளிவாகப் படித்துள்ளனர். ஈழ விடுதலை தேவை என்று சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைக்கு ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் அரசியல் புரிதலுடன் பயணிக்கின்றனர்.
அமித் ஷாவை விட மோடி ஆபத்தானவர். அமித் ஷா அம்பேத்கர் பெயரை நாடாளுமன்றத்தில் கிண்டலாக உச்சரித்துப் பேசியதற்கு பொறுப்புள்ள பதவியில் இருக்கும் மோடி அதை நியாயப்படுத்திப் பேசி இருப்பது வெட்கமாக இல்லையா? காங்கிரஸ் கட்சி முன்பு அம்பேத்கரை அவமதித்தது என்று சொல்லிவிட்டு ஏன் அமித் ஷா பேச்சை மோடி இப்போது கண்டிக்காமல் வக்காலத்து வாங்குவதற்கு என்ன அர்த்தம்? இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? நாடாளுமன்றத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணிக் கட்சிகள் போராட்டம் நடத்தத்தான் செய்வார்கள். ஏனென்றால் அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்கள் சொன்ன மக்கள் விடுதலையை ஏற்படுத்த வேண்டும் என்கிற பசி இருக்கிறது. ஆனால் பா.ஜ.க-வுக்கு மத போதை, சாதிய போதை, வர்ணாசிரம போதைதான் இருக்கிறது. அதை எப்படி வேடிக்கை பார்க்க முடியும்? என்றார்.