‘அரசியல் சடுகுடு’ என்ற தலைப்பில் நக்கீரன் நடத்தி வரும் நேர்காணலில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தொடர்பாளர் எஸ்.ஆர்.எஸ். இப்ராஹிம், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்து தனது கருத்துகளை நம்மிடையே பகிர்ந்துள்ளார்.
என்றைக்கு காங்கிரஸ் ஆட்சி அமைகிறதோ அன்றைக்குத்தான் மக்களுக்கு நல்ல நாள். மதவாத மற்றும் பிளவுவாத அரசியல்களை முட்டுக்கட்டை போடுவதும்தான் காங்கிரஸின் தெளிவான சித்தாந்தம். இதுதான் மக்களுக்கும் தேவை. ஆனால் மக்கள் விரும்புவதை கண்டுகொள்ளாமல் பா.ஜ.க. அரசு இருக்கிறது. மணிப்பூர் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக பற்றி எறிந்துகொண்டிருக்கிறது. இதற்கிடையில் பிரதமர் மோடி அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்று வருகிறார். ஆனால், ஏனோ இதுவரை ஒருமுறைகூட மணிப்பூர் பக்கம் மோடி போகவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் நாடாளுமன்றத்தில் விவாதப்பொருளாக இன்று இருக்கிறது. இதற்கு முன்பு மோடி, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்து எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்லத் தயார் என்று சூளுரைத்தார். ஆனால், பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெறும் இந்த சூழலில் மோடி அங்கு இல்லாமல் இருக்கிறார்.
மக்களவையில் இருப்பதற்கு பதிலாக மோடி, ராஜஸ்தானில் தன்னுடைய ஆட்சியில் ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது என்று திட்டங்களைத் தொடங்கி வைக்கப் போய்விட்டார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பா.ஜ.க.-வின் கனவுத் திட்டம். இதைத் தேர்தல் வாக்குறுதியில் முன்மாதிரியாகவும் பா.ஜ.க. காட்டியது. அப்படிப்பட்ட திட்டம குறித்த விவாதத்தில் மோடி இல்லாமல் இருப்பது, அந்த திட்டத்தைக் குறித்த பதில் அவருக்குத் தெரியாது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. தேசிய ஜனநாய கூட்டணிக்கு 362 இடங்கள் இருந்தால்தான் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான மசோதாவை தாக்கல் செய்து அமலுக்கு கொண்டுவர முடியும். இது அக்கூட்டணிக்கு நன்றாகத் தெரியும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 298. இதில் 269 நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக வாக்களித்துள்ளனர். கூட்டணியில் மீதமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்காமல் இருக்கும்போது, எப்படி ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான மசோதாவை தாக்கல் செய்து அரசாணையாக வெளியிடுவார்கள்?
மக்களவையில்தான் அப்படி இருக்கிறதென்றால், மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 158 இடங்கள் தேவைப்படுகிறது. ஆனால் அக்கூட்டணிக்கு 135 இடங்கள்தான் மாநிலங்களவை இருக்கிறது. இதை எப்படி பூர்த்தி செய்து ஒரே நாடு ஒரே தேர்தல் அரசாணையை வெளியிடுவார்கள். இதன் மூலம் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது எதையோ திசை திருப்ப கொண்டு வந்த மசோதா என்பதை தெளிவாக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இப்படி திசை திருப்புவதன் மூலம் அதானி சூரிய சக்தி மின்சாரம், மணிப்பூர் கலவரம், விலைவாசி உயர்வு ஆகியவைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கூடாது என மடைமாற்ற பா.ஜ.க. நினைக்கிறது. அதனால்தான் பிரதமர் மோடி மக்களவைக்கு வராமல் ஏதோ ஒரு திட்டத்தை செயல்படுத்த ராஜஸ்தானுக்குப் போயிருக்கிறார். நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்ததால்தான் மக்களவையில் மணிப்பூர் பற்றி மோடி இரண்டரை நிமிடம் பேசினார். அதன் பிறகு அவர் மணிப்பூர் பற்றி பேசவே இல்லை. மணிப்பூர் என்ற ஒரு மாநிலம் இல்லையென்றாலும் பரவாகவில்லை பா.ஜ.க. தங்களுடைய தேர்தல் கணக்குகளைத் தெளிவாகச் செய்து வருவோம் எனத் தீர்மானமாக இருக்கிறார்கள் என்பதை நாம் திட்டவட்டமாக தெரிந்துகொள்ள முடியும்.