தாத்தா திராவிடக் கழகத் தலைவர், தந்தை திமுகவை உருவாக்கிய ஐம்பெரும் தலைவர்களின் ஒருவர், தாய் அதிமுக அமைப்புச் செயலாளர்... இப்படி அடிப்படையிலேயே அரசியல் குடும்பம் என்பதால், அவர் அரசியலுக்கு வந்ததில் பெரிய ஆச்சரியம் ஒன்றுமில்லை. நடிகர் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தன்னுடைய அரசியல் குருவாக சிவாஜி கணேசனையே ஏற்றிருந்தார். கடந்த 1984 ஆம் ஆண்டு, நடைபெற்ற தமிழகச் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பாக சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமைக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் பெயரைச் சிவாஜி தான் சிபாரிசு செய்திருக்கிறார். இதனால், சிவாஜின் மீதான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மதிப்பு மேலும் அதிகரித்தது.
இந்த சூழலில் எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அதிமுக ஜெ, ஜா (ஜெயலலிதா - ஜானகி) என இரு அணிகளாக பிரிந்தது. அப்போது சிவாஜி ஜானகி பக்கமே நின்றார். அதனால், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் சிவாஜி பக்கமே, அதாவது ஜானகி பக்கமே நின்றார். அதிமுக இரண்டாக பிரிந்ததால், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் ஜானகி பக்கம் தான் காங்கிரஸ் நிற்க வேண்டும் என்றார் சிவாஜி. அதற்கு காங்கிரஸ், ‘ஜானகி பக்கமும் நிற்க முடியாது.. ஜெயலலிதா பக்கமும் நிற்கமுடியாது.. ஒருங்கிணைந்த அதிமுகவுக்கே எங்களின் ஆதரவு’ என்று கரார் காட்டியது. இதனால் சிவாஜி ஆத்திரமடைந்து, உடனடியாக அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸிலிருந்து விலகினார். ராஜினாமா செய்தவர்களில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் ஒருவர். இப்படி சிவாஜி எடுக்கும் முடிவிற்கு எல்லாம் அசைந்து கொடுத்து வந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சிவாஜி தொடங்கிய தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியில் இணைந்து 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
பின்னர் நடிகர் சிவாஜி கட்சியைக் கலைத்த நிலையில் தனது தாய் வீடான காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் திரும்பினார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். அதன்மூலம் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்ட அவர், தோல்வியையே சந்தித்தார். இருப்பினும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவி அவரை தேடி வந்தது. அதன்பிறகு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் வார்த்தைகளால் காங்கிரஸ் கட்சி மீண்டும் லைம்லட்டிற்கு வந்தது. அதன்பிறகு கலைஞர், ஜெயலலிதா என அனைத்து தலைவர்களையும் கடுமையாக விமர்சித்தார். அதிலும் கூட்டணிக் கட்சித் தலைவரான கலைஞர் குறித்தும் அவரது சமூகம் குறித்தும் காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் தொண்டர்களிடையே பேசியதாக செய்திகள் வெளியாகின. அவருக்கு எதிராக திமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் வெகுண்டு எழுந்தனர். உடனடியாக காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அதேசமயம் இதுகுறித்து கலைஞரிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் என் மடியில் வளர்ந்த குழந்தை, அந்த குழந்தைக்காக கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்கு கேட்டேன். அந்த குழந்தைதானே பேசினான். பேசிவிட்டு போகட்டும்’ என்றார். இதற்கு பின்னாளில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வருத்தமும் தெரிவித்தார். இப்படி கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என்று கூட பாராமல் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அனைவரையும் விமர்சித்தார். இதனையெல்லாம் சில காங்கிரஸ்காரர்களே விரும்பவில்லை.
இந்த சூழலில், 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், கோபிசெட்டிபாளையத்தில் போட்டியிட்டு பெரும் வெற்றிபெற்று மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ஜவுளித்துறை இணை அமைச்சராக பொறுப்பு வகித்தார். அதன்பிறகு நடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு மதிமுக வேட்பாளர் கணேச மூர்த்தியிடம் தோல்வியடைந்தார்.பின்னர், நடந்த 2014 ஆம் நாடாளுமன்றத் தேர்தலிலும் திருப்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த சூழலில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு, ஒ.பி.எஸ் மகன் ஒ.பி.ரவிந்தரநாத்திடம் தோல்வியை சந்தித்தார். இந்த தேர்தலில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேனியை தவிர மீதமுள்ள 39 தொகுதியையும் கைப்பற்றி பெரும் வெற்றியை பதிவு செய்தது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் தோற்றுப்போனார்.
1989க்கு பிறகு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எந்த சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிடவில்லை. ஆனால், அவரது மகன் திருமகன் ஈ.வெ.ரா 2021 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்தாண்டு திருமகன் ஈ.வெ.ரா உயிரிழந்ததையடுத்து, அந்த தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று 39 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.
கூட்டணிக் கட்சித் தலைவரோ, எதிர்க்கட்சி தலைவரோ ஏன் சொந்த கட்சியினராக இருந்தாலும் கூட தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் அரசியல்வாதி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகால தனது அரசியலில் எப்போதும் லைம் லட்டிலேயே இருந்தார். இந்த நிலையில் இன்று உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்திருப்பது காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.