Skip to main content

பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்களுடன் வெளியான எஃப்.ஐ.ஆர்; காவல்துறை விடுத்த எச்சரிக்கை!

Published on 26/12/2024 | Edited on 26/12/2024
Police warning for FIR published with details of the victim student

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், தனது ஆண் நண்பருடன் பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர், அந்த ஆண் நண்பரைத் தாக்கிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பிலிருந்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட  ஞானசேகரனை நேற்று இரவு (25-12-24) போலீசார் கைது செய்தனர் . ஞானசேகரன் மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் திருட்டு வழிபறி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அண்ணா பல்கலைகழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அதே வேளையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் அதன் எஃப்.ஐ.ஆர் நகல் வெளியாகி சர்ச்சையானது. பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபரின் விவரங்களை வெளியிடக் கூடாது என்பது சட்டமாக இருக்கின்ற சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக பெண்ணின் பெயர், முகவரி, அவர் எங்கே வசிக்கிறார்?, எந்த துறையில் படித்து வருகிறார்?, எந்த நபருடன் தனியாக அமர்ந்திருந்தார்? என்பது குறித்த பல்வேறு விவரங்களுடன் கூடிய எஃப்.ஐ.ஆர் காப்பி வெளியாகியிருந்ததாகக் கூறப்பட்டது. 

இந்த நிலையில், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படமோ, எஃப்.ஐ.ஆர் நகலையோ இணையத்தளத்தில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சார்ந்த செய்திகள்