‘அரசியல் சடுகுடு’ என்ற தலைப்பில் நக்கீரன் நடத்தி வரும் நேர்காணலில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் நிர்வாகி கிருத்திகா தரண், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் பற்றி சர்ச்சையாக பேசியது பற்றி தனது கருத்துகளை நம்மோடு பகிர்ந்துள்ளார்.
இளையராஜா கோயிலுக்குள் செல்லும்போது அர்த்த மண்டபத்தில் கூட இடம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் அம்பேத்கர், இளையராஜாவை ராஜ்ய சபா உறுப்பினராக உட்கார வைத்துள்ளார். ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு புதிய பாராளுமன்றத்தில் நடந்த பூஜையில் இடம் கொடுக்கவில்லை. கடவுள் பெயரால் பா.ஜ.க. செய்யும் அரசியல் யாரையும் சமமாக நடத்தாது. படுக்கை, சமையல், பூஜை அறைகளில் செய்வதெல்லாம் தனிப்பட்டது. அரசியலில் தனிப்பட்டதை திணிக்க கூடாது. அரசியலமைப்பு என்பது ஆண், பெண், சாதி, மதம் என அனைத்தையும் சமமாகப் பார்க்கும். அரசியலமைப்பு தரும் சமத்துவத்தை சனாதனம் நிச்சயம் தராது.
சனாதனம் என்றால் நிரந்தரம் எனப் பொருள். எது நிரந்தரம்? பெண்கள் தேவதாசிகளாகவும் சமையல் அறையிலும் இருந்ததுதான் நிரந்தரமா? வர்ணாசிரமத்தில் பெண்களுக்கு இடம் கொடுக்காமல் வைத்திருப்பது நிரந்தரமா? வர்ணாசிரமத்தில் பெண் பால் கிடையாது. நான்கு வர்ணத்தில் வராதவர்களை சண்டாளர்கள் என்று சொல்வார்கள். அவர்களையும் பெண்களை ஒன்றாக வைத்துப் பார்ப்பார்கள். வேத ஆகமங்களைப் படித்தால் பெண்களையும் சண்டாளர்களையும் சமமாக நடத்தக்கூடாது என்று இருக்கும். குறிப்பிட்ட நேரத்தில் கோயிலுக்குள் வரக்கூடாது என்றும் வந்தால் தீட்டு என்றும் பல ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஒரு பெண் ஜனாபதியாக இருக்கும் நாட்டில் அம்பேத்கரைப் பற்றியும் அவர் எழுதிய அரசியலைப்பைப் பற்றியும் பேசாமல், கடவுள் பெயரை அமித்ஷா பேசவேண்டும் எனச் சொல்லுவது வர்ணாசிரமத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவரப் பார்ப்பதுதான்.
பாராளுமன்றம் அரசியலமைப்பு அடிப்படையில் செயல்பட்டு வரும் நிலையில், சனாதன தர்மத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவரத்தான் அமித்ஷா அப்படி பேசியிருக்கிறார். 1950-ல் அனைவரும் சமம் என்று பேசினோம். ஆனால், 2024-ல் அனைவரும் சமமில்லை எனப் பேசும் அளவிற்கு அரசியலில் கரை படிந்துள்ளது. பெண்களை மதிக்காத சனாதன தர்மத்தை மீண்டும் மீண்டும் அமித்ஷா பேசிவருகிறார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பெண்கள் உண்டா? அதில் டிராயர் போட்ட பெண்களை யாராவது பார்த்திருக்கிறீர்களா? ராஷ்டிரிய சேவா சமிதி என்ற கம்பு வைத்துள்ள பெண்கள் அமைப்பு மட்டும் தான் இருக்கிறது. அதைத் தவிர்த்து ஆர்.எஸ்.எஸ். என்பது பிராமண ஆண்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்புதான். அந்த அமைப்பில் உயர் சாதி என்று தங்களை அடையாளப்படுத்தி கட்சி ஆரம்பித்து அதிகாரத்தில் உட்கார்ந்துகொண்டு பெண்களை கோயிலில் பொம்பைகள்போல் அலங்காரத்திற்காகப் பயன்படுத்துகிறார். ஜனாதிபதி, நிதி அமைச்சர் என அனைவரும் அவர்களிடம் கோயில் அலங்கார பொருட்களாகத்தான் இருக்கிறார்களே தவிர்த்து அதில் சொல்வதற்கு வேறொன்றும் இல்லை. இதுதான் சனாதன தர்மம். இதை ஏற்றுக்கொண்டால்தான் அந்த கட்சியில் இருக்க முடியும்.
மோடி தேர்தல் சமயத்தில் என்னவெல்லாம் பேசினார் என்பது அனைவருக்கும் தெரியும். வான் வழியாகப் பிறந்த அந்த ஆளுமை மிக்கவரிடம் அம்பேத்கரைப் பற்றிப் பேசினால் எப்படி இருக்கும்? அவர் தனது மனதில் என்ன தோன்றுகிறதோ அதைத்தான் பேசுவார். அம்பேத்கருக்கு காங்கிரஸுடன் கருத்து வேறுபாடு கிடையாது, நேருவுடன்தான் இருந்தது. அதன் பிறகு இந்தியாவில் மாற்றம் கொண்டு வருவதற்காக காங்கிரஸுடன் தன்னை அம்பேத்கர் இணைத்துக்கொண்டார். இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் மதச்சார்பின்மையையும் சமத்துவத்தையும் எந்த கட்சி ஆரம்பித்தது? அம்பேத்கரை அழைத்து அரசிலமைப்பை உருவாக்கச் சொன்னது எந்த கட்சி? தேர்தலில் அம்பேத்கர் தோல்வி அடைந்தது, அந்த பகுதியைச் சேர்ந்த தனிப்பட்ட விஷயம். ஆனால் அம்பேத்கரை இந்தியா முழுமைக்கும் அரசியலைப்பு என்றால் அம்பேத்கர். அம்பேத்கர் என்றால் அரசியலைப்பு என்று கொண்டு வந்தது காங்கிரஸ்தான் இதில் ஏதாவது மறுப்பு சொல்ல இருக்கிறதா?.
பெண்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் இருக்கிற கட்சி பா.ஜ.க. நான் முன்பு சொன்னவர்கள் ஏன் அந்த கட்சியில் இருக்கிறார்கள்? என்பது தெரியவில்லை. பெண்களை மதிக்காமல் வெறும் ஆடியோ, வீடியோவிற்கு பயன்படுத்துகிறார்களா? என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. அரசியலமைப்பு அனைவரையும் சமம் என்று சொல்லும்போது, அமித்ஷா மீண்டும் சனாதனத்தை தூக்கிப் பிடித்து வருகிறார். இன்றைக்கு இந்துவாக இருக்கும் நான் சபரி மலைக்குள் போக முடியாது. தீட்டு என்ற விஷயத்தை வைத்து இன்றுவரை பெண்களை ஒதுக்கி வைத்துப் பார்க்கிறார்கள். அந்த தீட்டு என்ற விஷயம் இல்லையென்றால் பா.ஜ.க.-வில் இருப்பவர்கள் பிறந்திருக்க முடியாது. பெண்களின் உதிரத்தில் பிறந்தவர்கள். அந்த உதிரத்தை வைத்து ஒதுக்கி வைப்பது எந்த விதத்தில் நியாயம்? ஒரு இந்து பெண்ணாக நான் திருப்பதிக்கு போவதுபோல் எல்லா கோயிலுக்குள்ளும் போக உரிமை இருக்கிறது. ஒரு பிராமணப் பெண் சங்கர மடத்திற்கு தலைவராக ஆகமுடியுமா? வேத பாட சாலையில் கல்வி கற்க முடியுமா? கருவறைக்குள் போக முடியுமா? இளையராஜாவை மட்டும் ஒதுக்கி வைக்கவில்லை. பிராமணப் பெண்களையும்தான் ஒதுக்கி வைத்துள்ளார்கள். கடவுளுக்கும் நமக்கும் இடையே புரோக்கர்ஸ் தேவையில்லை. கடவுளை வழிபடுவது தனி நபர் இஷ்டம். அரசியலில் மதத்தை பற்றி பேசுவது உள்ளாடையை வெளியில் உலர்த்துவதற்குச் சமம். பெண்களுக்கு ஏது விஸ்வகர்மா திட்டம்? பெண்கள் தேவதாசி தொழில்கூட காசு இல்லாமல் வஞ்சிக்கப்பட்டார்கள். பெண்களுக்குத் தொழில் இல்லை. சொத்தை விற்க முடியாமல் கஷ்டப்பட்டார்கள். பெண்களை வெறும் கோபுர பொம்மைகளாக வைத்துக்கொண்டு, கருவறைக்குள் அனுமதி தர மறுக்கிறார்கள். அற்ப அரசியல் செய்பவர்கள்தான் 10 வருடம் ஆட்சி செய்து வருகிறார்கள். அந்த ஆட்சி நமக்குத் தேவை இல்லை என்றார்.
Published on 19/12/2024 | Edited on 19/12/2024