விழுப்புரம் மாவட்டம் வானூரில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலக பகுதியில் 43 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமப்புற பகுதிகளில் இருந்து விவசாயிகள் பொதுமக்கள் நிலம், வீட்டுமனை விற்பது, வாங்குவது என எப்போதும் பரபரப்பாக இந்த அலுவலகம் செயல்பட்டு வருகின்றது.
தற்போது இங்கு சார் பதிவாளராக பொறுப்பு அதிகாரி வெங்கடேசன் மற்றும் ஊழியர்கள் பணியை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. யுவராஜ் தலைமையிலான போலீசார் திடீரென சார்பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு நடத்தினார்கள். அப்போது அலுவலகத்தின் கதவுகள் மூடப்பட்டிருந்தன. அங்கு பத்திரம் பதிவு செய்வதற்காக வந்திருந்த 50க்கும் மேற்பட்டவர்களை அலுவலகத்தின் உள்ளேயே வைத்து விசாரணை நடத்தினர்.
சார்பதிவாளரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அலுவலகத்தில் கணக்கில் இல்லாத ஒரு லட்சம் ரூபாய் பணம் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோன்று கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோயில் அருகே உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ராஜாசிங் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் திருவேங்கடம், சண்முகம் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் மாலை 6 மணி அளவில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் திடீர் ரெய்டு செய்தனர்.
அப்போது பத்திரம் அடகு வைப்பது சம்பந்தமாக அலுவலகத்தில் இருந்த வெள்ளபாக்கம் கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் இருந்து 1,500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் அலுவலகம் அருகில் இருந்த பத்திரம் எழுத்தர் அலுவலகங்களிலும் சோதனையில் ஈடுபட்டனர். அதில் ஒரு பத்திர எழுத்தர் அலுவலகத்தில் பணி செய்து வரும் பெண்ணிடம் இருந்து 3,000 ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து பதிவாளர் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. மாலை 6 மணிக்கு ஆரம்பித்த சோதனை இரவு 9.30 மணி வரை நடைபெற்றுள்ளது. இதில் கணக்கில் வராத பணம் 58 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பத்திரப்பதிவு அலுவலகங்களில் திடீர் ரெய்டு நடத்தி பணம் பறிமுதல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.