
ஆன்லைன் விளையாட்டு கேம்-ஆல் சிறுவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரை, காமராஜபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகன் ஹரிஹரசுதன் (17). பதினோராம் வகுப்பு வரை படித்த ஹரிஹரசுதன் கடந்த ஆண்டு பள்ளிப் படிப்பை விட்டுவிட்டு ஒரு வருடமாகவே வீட்டில் இருந்துள்ளார். தொடர்ச்சியாக மொபைல் கேம்களான பப்ஜி, ஃபிரீ பையர் உள்ளிட்ட ஆன்லைன் கேம்களை விளையாடுவதில் நாட்டம் கொண்டிருந்துள்ளார்.
சிறுவனின் செயலை அவரது பெற்றோர்கள் தொடர்ச்சியாக கண்டித்து வந்தனர். ஆனாலும் சிறுவன் கேம்களில் தீவிரம் காட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆன்லைன் கேம்களால் தொடர் மன உளைச்சலுக்கு உள்ளான ஹரிஹரசுதன் பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டில் மாடிக்கு சென்று தன்னுடைய செல்போனை கீழே போட்டு உடைத்து விட்டு மாடியில் இருந்து குதித்துள்ளார்.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்த பொழுது சிறுவன் மூச்சுப்பேச்சு இல்லாமல் கிடந்துள்ளார். படுகாயம் அடைந்த ஹரிஹரசுதனை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்பொழுது சிறுவன் உடலுக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆன்லைன் கேமால் மன உளைச்சலுக்கு உள்ளாகி சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சம்பவத்திற்கு ஆன்லைன் கேம் தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது தொடர்பாகவும் கீழக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.