Skip to main content

கிராம நிர்வாக அலுவலரை மிரட்டிய வாலிபர் கைது!

Published on 29/09/2020 | Edited on 30/09/2020

 

kk

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகிலுள்ளது புக்குளம் கிராமம். இந்த கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலராக முனியப்பன் என்பவர் பணி செய்து வருகிறார்.

 

சம்பவத்தன்று தியாகதுருகம் டவுனில் கிராம நிர்வாக அலுவலர் முனியப்பன் நின்று கொண்டிருந்தார். அப்போது தியாகதுருகம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த வினோத் என்ற வாலிபர், கிராம நிர்வாக அலுவலரிடம் வந்து வேறு ஒரு நபருக்குச் சொந்தமான நிலத்தின் சிட்டாவை கொடுத்து புக்குளம் ஊரில் உள்ள ஏரியில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் முனியப்பன் தாங்கள் கூறும் புக்குளம் ஏரியில் தற்போது தண்ணீர் உள்ளது. மேலும், விவசாயப் பயன்பாட்டிற்கு இல்லாமல் வணிகரீதியாக வியாபாரம் செய்யும் நோக்கில் மண் எடுப்பதற்கு அனுமதி அளிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

 

"இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த வினோத், தன்மீது பொக்லைன் இயந்திரத்தை ஏற்றிக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக" கிராம நிர்வாக அலுவலர் முனியப்பன் தியாகதுருகம் போலீசில் புகார் அளித்துள்ளார். அவரது, புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து முனியப்பனுக்கு கொலை மிரட்டல் விடுத்த வினோத்தை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த தகவல் தியாகதுருகம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்