Skip to main content

ரூ.10 சாக்லேட் வாங்கியதற்காகச் சிறுமியின் பிறப்புறுப்பில் சூடு வைத்த அத்தை!

Published on 12/03/2025 | Edited on 12/03/2025

 

mumbai court grant bail at woman accused heats girl's private parts for buying Rs.10 chocolate

சாக்லேட் வாங்க ரூ.10 செலவழித்ததால் மருமகளின் பிறப்புறுப்பில் சூடு வைத்த சம்பவத்தில் அத்தைக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்தவர் 7 வயது சிறுமி. இவருடைய தாய் இறந்துவிட்டதாலும், தந்தை மதுவுக்கு அடிமையானவர் என்பதாலும், குழந்தை தனது அத்தையான வந்தனா காலே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி தனது மருமகளான அந்த சிறுமியிடம் ரூ.50 கொடுத்து கோழிக்கறி வாங்குமாறு வந்தனா கூறியுள்ளார். ஆனால், அந்த சிறுமி திரும்பி வரும் போது 10 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கி சாப்பிட்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த வந்தனா, குழந்தையின் கை மற்றும் கால்களை கயிற்றால் கட்டி, வாயில் துணியை வைத்து திணித்துள்ளார். மேலும், சூடான கரண்டியை எடுத்து சிறுமியின் பிறப்புறுப்பிலும் தொடையிலும் சூடு வைத்துள்ளார். இதில், அந்த சிறுமி கதறி துடித்துள்ளார். இதனையடுத்து, கடுமையான காயங்கள் காரணமாக சிறுமி நடக்க முடியாமல் தவித்துள்ளார். இதனை பார்த்த சிறுமியின் உறவினர் ஒருவர், இச்சம்பவம் குறித்து போலீசிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், வந்தனா மீது கடந்த 2020ஆம் ஆண்டு கொலை முயற்சி, போக்சோ சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதையடுத்து தனக்கு எதிராக போடப்பட்ட வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி வந்தனா மும்பை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஷ்வ்குமார் டிகே அமர்வு முன்பு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், ‘குற்றம்சாட்டப்பட்ட நபர், 7 வயது குழந்தையை கொடுமைப்படுத்தியுள்ளார் என்பது மருத்துவ ஆதாரங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது. ஒரு வேளை, அந்த பெண் சிறையில் இருந்து வெளியே வந்தால், பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் சாட்சியத்துக்கும் மிரட்டல் கொடுப்பார்’ என்று தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ‘குற்றம்சாட்டப்பட்ட பெண், நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளார். இந்த வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. அவர் தனது ஏழு வயது மகளுடன் சிறையில் உள்ளார். அவரின் சிறைவாசக் காலத்தைக் கருத்தில் கொண்டு அவரை மேலும் காவலில் வைக்க வேண்டிய அவசியமில்லை’ என்று கூறி குற்றம்சாட்டப்பட்ட வந்தனாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 

சார்ந்த செய்திகள்