
சென்னை டூ பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிவேக பயணத்தால் அடிக்கடி விபத்துக்கள் நடப்பது வாடிக்கையாகவுள்ளது. இதுபற்றி சில முறை விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டாலும் அதனை வாகன ஓட்டிகள் பெரிதும் கண்டுகொள்வதில்லை.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து திருப்பத்தூர் நோக்கி ஒரு கார் சென்றுகொண்டிருந்தது. அந்த கார் ஆம்பூர் கடந்து சின்னகொம்மேஸ்வரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, காரின் முன் டயர் வெடித்து எதிரில் வந்த மினி வேன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணம் செய்த பெண் ஒருவர் உயிரிழந்தார், காரில் பயணம் செய்த மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளால் மீட்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தந்து மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஆம்பூர் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.