Skip to main content

சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடி; கடத்தப்பட்ட பெற்றோர் - தகிக்கும் சேலம்!

Published on 12/03/2025 | Edited on 12/03/2025

 

Parents of a young man who married against caste in Salem kidnapped

சேலம் மாவட்டம் வெள்ளாளன் குண்டம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் கண்ணன். பனமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ஸ்ரீ நிதி. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் கடந்த மூன்று வருடமாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரியவர, இரு வீட்டாரும் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து  வீட்டில் இருந்து வெளியேறிய விக்னேஷ் கண்ணனும், ஸ்ரீ நிதியும்  நேற்று காதல் திருமணம் செய்துகொண்டனர்.  திருமணம் முடிந்த கையோடு வாழப்பாடி காவல் நிலையம் சென்ற காதல் ஜோடி தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் பெண் வீட்டார் தரப்பில் இருந்து சோலைக்குமார் என்பவர் இளைஞரின் பெற்றோரை கடத்தி வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும், பெண்ணை அழைத்து வந்து ஒப்படைத்துவிட்டுப் பெற்றோரை கூட்டிச்செல்லுமாறு இளைஞருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக காதல் ஜோடி குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து  பெற்றோர் கடத்தல் விவகாரம் குறித்து காதல் ஜோடி வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர். ஆனால், புகாரை வாங்க மறுத்து போலீசார், ‘இது எங்களது காவல்நிலைய எல்லைக்கு வராது; சேலம் கொண்டலாம்பட்டி காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுங்கள்..’ என்று கூறியுள்ளனர். அதன் பிறகு அங்குச் சென்றால், மல்லூர் காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுங்கள் என்று மாறி மாறி காதல் ஜோடியை அலைக்கழித்தாக கூறப்படுகிறது.

இது குறித்து பேசிய விக்னேஷ் கண்ணன், “எனது பெற்றோரை கடத்தி வைத்துக் கொண்டு பெண்ணை அழைத்து வந்து விடச் சொல்லி கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். ஆனால் நான் பெண்ணை(ஸ்ரீ நிதி) அவர்களிடம் ஒப்படைத்தால் அவரை(ஸ்ரீ நிதி) கொன்று விடுவார்கள்.  அதே சமயம் நான் பெண்ணை அவர்களிடம் ஒப்படைக்காவிட்டால் எனது பெற்றோரை கொன்று விடுவார்கள். இது இரண்டும் இல்லையென்றால்,  நீங்கள் எப்போது ஊருக்குள் வந்தாலும் உங்கள் இருவரையும் கொன்று விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். சோலை குமாருக்கு இருக்கும் அரசியல் பின்புலத்தின் காரணமாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் கூட வாங்க மறுக்கின்றனர்” என்று வேதனையுடன்  தெரிவித்துள்ளார். தற்போது இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்