
காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடியாக இருந்த வசூல்ராஜா என்ற நபர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் நான்கு பேர் கல்லூரி மாணவர்கள் என்பதும், மூன்று பேர் சிறுவர்கள் என்ற பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த கொலை சம்பவத்தின் பின்னணி தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் நிவாஸ் கான் என்ற நபரை கடந்த 2018 ஆம் ஆண்டு வசூல்ராஜா கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. வசூல்ராஜா மீது நான்கு கொலை வழக்குகள், மூன்று கொலை முயற்சி வழக்குகள் என மொத்தம் 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.
நிவாஸ் கான் கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் வசூல் ராஜாவை கொலை செய்துள்ளது தெரியவந்தது. கொலை சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நான்கு கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோல் இந்த கொலைக்கு 3 சிறுவர்கள் பயன்படுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வெடிகுண்டு வீசி வசூல்ராஜா கொல்லப்பட்ட நிலையில் நாட்டு வெடிகுண்டுகளை கல்லூரி மாணவர்கள் எங்கே வாங்கினார்கள் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் யூடியூப் தளத்தில் 'வெடிகுண்டுகளை எவ்வாறு தயாரிப்பது?' என தேடிப் பார்த்துத் தெரிந்து கொண்டு தாங்களாகவே தயாரித்ததாக கல்லூரி மாணவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதேபோல நாட்டு வெடிகுண்டு உருவாக்குவதில் சென்னையை சேர்ந்த நபர் ஒருவரும் உதவியதாகக் கூறப்பட்ட நிலையில் அந்த நபரை போலீசார் பிடிக்க முயன்று வருகின்றனர்.

ரவுடிகள் கொலை; அதிகார மோதல் கொலை; முன்பகை கொலை; ஆணவக் கொலை என சமூகப் பதற்றங்களை ஏற்படுத்தும் சம்பவங்களில் பெரிய நபர்கள்தான் ஈடுபடுவர் என்ற, ஒருவித மனோபாவ கற்பிதம் இருக்கும் நிலையில், சமீபமாகவே கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் 17 வயதிற்கும் குறைந்த சிறுவர்கள் கைது செய்யப்படுவது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.