Skip to main content

“கோவில் நிலத்தை ஒப்படைக்க தவறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்”- உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 15/09/2021 | Edited on 15/09/2021

 

Legal action will be taken against those who fail to hand over the temple land

 

கோவில் நிலத்தை அபகரித்தவர்களுக்கு எதிராகக் குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி, மயிலாப்பூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் பேயாழ்வார் தேவஸ்தானம் திருக்கோயிலின் ஐந்து அறங்காவலர்களைத் தற்காலிக நீக்கம் செய்து அறநிலையத் துறை உத்தரவிட்டது. தற்காலிக நீக்கம் செய்ததை எதிர்த்து ஸ்ரீதரன் என்ற அறங்காவலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம், மற்ற 4 பேருக்கு எதிரான  தற்காலிக நீக்கத்திற்கு  ஏற்கனவே இடைக்காலத் தடை விதித்துள்ளதாகக் கூறி, ஸ்ரீதரனை தற்காலிக நீக்கம் செய்து அறநிலையத் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதி, சட்டப்படி விசாரணையைத்  தொடர அனுமதி அளித்தார்.அதே சமயம், கோவில் நிலத்தை யாரேனும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இருந்தால், அவர்கள் தாமாக முன்வந்து அந்த நிலங்களை அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தவறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிட வேண்டுமென அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

மேலும், கோவில் நிலங்களை அபகரிப்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, கோவில் நிலம், சொத்து, நகைகளை மீட்கும் நடவடிக்கைகளைக் கண்காணிக்கச் சிறப்புப் பிரிவை ஏற்படுத்த வேண்டும் எனவும், அந்த சிறப்புப் பிரிவின் தொலைப்பேசி எண், மொபைல் எண்களை  அனைத்து கோவில்கள் மற்றும் அறநிலையத் துறை அலுவலகங்களில் பக்தர்கள் புகார் அளிக்கும் வகையில் தெரியப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

 

 


 

சார்ந்த செய்திகள்