
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில், அடுத்த ஆண்டு 2026இல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள மம்தா பானர்ஜி ஆயுத்தமாகி வருகிறார். அதற்காக பல கட்டங்களாக தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் இருக்கும் மம்தா பானர்ஜி, மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதனால், அடுத்த ஆண்டில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் - காங்கிரஸ் - பா.ஜ.க ஆகிய மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், முஸ்லிம் சமூக மக்கள் குறித்து மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார். மேற்கு வங்க சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் முடியும் வரை மேற்கு வங்க பா.ஜ.க மாநிலத் தலைவர் சுவேந்து அதிகாரி சட்டமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அதன் எதிரொலியாக நேற்று (11-03-25) சுவேந்து அதிகாரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, “மம்தா பானர்ஜியின் அரசாங்கம், முஸ்லிம் லீக்கின் இரண்டாவது பதிப்பை போல ஒரு வகுப்புவாத நிர்வாகம். மேற்கு வங்காள மக்கள், இந்த முறை அவர்களை வேரோடு பிடுங்கி எறிவார்கள். அடுத்த 2026 சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க வெற்றி பெற்றால், முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்” என்று பேசினார். பா.ஜ.க தலைவரின் இந்த சர்ச்சை பேச்சுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.