
திமுகவில் இப்போது பரபரப்பாக இருக்கும் அணிகளில் முக்கியமானது மாணவர் அணி தான். ஒன்றியரசின் மும்மொழி திணிப்பு எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு என திமுக மாணவரணியினர் போராட்ட களத்திலேயே உள்ளனர். நாட்டின் தலைநகரமான டெல்லி வரை சென்று போராட்டம் நடத்தியவர்கள், இப்போது மாவட்டந்தோறும், கல்லூரிகள் தோறும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்திவருகின்றனர்.
இப்படி பரபரப்பாக அந்த அணி செயல்பட்டு வந்த நிலையில், திமுக மாணவரணி மாநிலச் செயலாளராக இருந்த சி.வி.எம்.பி.எழிலரசன் அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திமுக மாணவரணி மாநிலச் செயலாளராக, அப்பரிவின் மாநில தலைவராக இருந்த ராஜிவ்காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இது திமுக மாணவரணியில் ஆச்சர்யத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
2001க்கு பிறகு நாதகவில் இருந்து திமுகவுக்கு வருகை தந்த ராஜீவ்காந்திக்கு திமுக மாணவரணி மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது. அப்பதவிக்கு வந்த ராஜிவ்காந்திக்கும் எழிலரசனுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் இருந்துவந்ததாக தகவல் வெளியாகின. ராஜீவ்காந்திக்கு மாணவர் அணியில் தான் தனித்து இயங்கவேண்டும், அணியில் யார் கட்டுப்பாட்டிலும் நாம் இருக்கக்கூடாது என எண்ணம் கொண்டியிருந்தார், இதனால் அணி செயலாளரான எழிலரசன் சொல்வதை கேட்கவில்லை. உங்களை விட நான் பெரிய ஆள் என்று அணியில் தனி ட்ராக்கே ஓட்டியிருக்கிறாராம். இதுகுறித்து தலைமை வரைக்குமே புகார் சென்றது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இந்நிலையில் தான் இந்த மாற்றம் நடைபெற்றுள்ளதாகவும் கூறுகிறார்கள்.
திமுக மாணவரணி மாநில நிர்வாகிகளிடத்தில் நாம் பேசியபோது,”இருவருக்கும் கருத்து முரண்பாடுகள் எல்லாம் இல்லை. மாநிலச் செயலாளராக எழிலரசன் எம்.எல்.ஏ அவர்கள் கடந்த 7 ஆண்டுகளாக அந்த பதவியில் இருந்தார். ஓராண்டுக்கு முன்பே அப்பொறுப்பில் இருந்து விடுவித்து வேறு பொறுப்பு வழங்குமாறு தலைவரிடம் கேட்டிருந்தார். தமிழ் மாணவர் மன்றம் அமைக்கும் பொறுப்பை ஒப்படைத்திருந்ததால் தமிழ்நாடு முழுவதும் மாணவர் மன்றம் கட்டமைக்கும் வேலையில் ஈடுப்பட்டுயிருந்தார் எழிலரசன். அந்த பணி முடிவுற்றதால் இப்போது அவர் கேட்டுக்கொண்டதால் மாணவர் அணியில் இருந்து கட்சியின் கொள்கை பரப்புச்செயலாளராக தலைவர் மாற்றியுள்ளார்” என்கிறார்கள்.