தமிழக கடற்கரையிலிருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களும் உறவினர்களும் நெருப்பை வயிற்றில் கட்டிக் கொண்டுதான் இருக்க வேண்டியுள்ளது. எந்த நேரத்தில் இலங்கை கடற்படை தாக்குதல் நடக்கும், கைது நடக்கும் என்பதை நினைத்து நினைத்தே தொழில் செய்ய முடியாமல் தவிக்கின்றனர் மீனவர்கள்.
அதிலும் தற்போது ராஜபக்சேவால் உள்நாட்டு குழப்பம் தொடங்கியுள்ள நிலையில் இந்திய மீனவர்களின் நிலை மோசமாகவே உள்ளது.
இந்தநிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஒரு விசைபடகு 6 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம் செய்துள்ளது.
ஜெகதாப்பட்டிணத்திலிருந்து 29-ம் தேதி 123-விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். ராஜீவ்காந்தி காந்தி என்பவருக்கு சொந்தமான விசை படகில் ராஜாராம் (28) ராகுல் (23) பாலையா (60) லட்சுமணன் (57) அருளரசன் ( 31) அருள் (18) ஆகியோர் 30 - நாட்டிக்கல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.
தொடரும் இந்த சம்பவத்தில் மத்திய மாநில அரசுகள் தலையிட்டு மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று உறவினர்களும் மீனவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் கைது செய்யப்ப்பட்ட மீனவர்களின் உறவினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.