Skip to main content

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டம்!!

Published on 21/01/2021 | Edited on 21/01/2021

 

Students protest at Raja Muthiah Medical College Hospital

 

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கடந்த 42 நாட்களாக தமிழகத்தின் மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தைப் போலவே சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியிலும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவத்தில் அறவழியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

 

இவர்களின் போராட்டம் நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் எந்த இடையூறும் இல்லாமல் கல்லூரி நேரம் முடிந்தும் உணவு இடைவேளை நேரத்திலும் 42 நாட்களாக தொடர்ந்து வருகிறது. இவர்களின் போராட்டத்தை தமிழக அரசும், பல்கலைக்கழக நிர்வாகமும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

 

இதனால் விரக்தி அடைந்த  மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் புதன் கிழமை அவசர சிகிச்சை தவிர மற்ற அனைத்து பணிகளையும் தவிர்த்து பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் ஒன்றுகூடி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவக் கல்லூரிக்கு இன்று சிகிச்சைக்கு வந்த புறநோயாளிகள், உள்நோயாளிகள் என அனைவரும் பாதிக்கப்பட்டனர்.

 

தமிழக அரசு மாணவர்  நலனில் செவிசாய்க்காமல் இருக்குமேயானால் வரும் வெள்ளிக்கிழமை முதல் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட எந்தப் பணிக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் செல்லாமல் பணியைப் புறக்கணித்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம், காலவரையற்ற விடுமுறை அளித்து விடுதி மற்றும் கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியேற உத்தரவிட்டது.

 

இதனைத் தொடர்ந்து விடுதியில் இருந்த மாணவிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர். பின்னர் அனைத்து மாணவர்களும், மாணவி விடுதி தாமரை இல்லத்தின் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தந்தை உயிரிழந்த போதும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 student who wrote her 12th class exam despite  passed away of her father

கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தினவடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை(15.3.2024) காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார்.  இவரது மகள் ராஜேஸ்வரி வயது 16 இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுத செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story

“மத்திய அரசு சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்தியதன் நோக்கம் இதுதான்” - திருமாவளவன்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Thirumavalavan announced the protest for CAA Act

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முன்தினம் முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சி.ஏ.ஏ சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதனையொட்டி, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருமாவளவன், “இந்த சட்டத்திற்கு இந்தியா முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். அந்த எதிர்ப்பை எதிர்கொள்ள இயலாத காரணத்தில் கடந்த 3 ஆண்டுகளாக் அச்சட்டத்தை கிடப்பில் போட்டு வைத்திருந்தார்கள். தேர்தல் நேரத்தில் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இப்போது அதை அமல்படுத்திருக்கிறார்கள். இதன் மூலம் பெரும்பான்மைவாத அரசியலை முன்னெடுக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், வரும் மார்ச் 15ஆம் தேதி அன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். பா.ஜ.க.வினர் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் சென்றதேயில்லை. மணிப்பூரில் நாள்தோறும் பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது. ஆனால், பிரதமரோ, உள்துறை அமைச்சரோ அங்கு சென்று பார்க்கவேயில்லை. ஆனால், தேர்தல் நேரத்தில் ஒரே மாநிலத்தில் திரும்ப திரும்ப வருகிற நிலையை நாம் பார்க்கிறோம். அவர்கள் எவ்வளவு சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் நலனை விட தங்கள் அரசியல் ஆதாயம் தான் முக்கியம் என்று கருதக்கூடியவர்கள். அதனால், இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பது அவசியம். சனாதன சக்திக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்” என்று கூறினார்.