தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகவும், உரிமைக்காகவும் காந்தியடிகள் போராட்டம் நடத்தியபோது அவருடன் உறுதுணையாக நின்று போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்று உயிர்விட்ட தமிழ் பெண்மணியான தில்லையாடி வள்ளியம்மையின் 105 ஆவது நினைவு தினம் நேற்று.
நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகில் உள்ள தில்லையாடியை சேர்ந்த நெசவு தொழிலாளர்கள் முனுசாமி மங்கலம் தம்பதியினர். இவர்களுக்கு 1898 ல் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பார்க்கில் பிறந்தவர் வள்ளியம்மை.
தென்னாப்பிரிக்காவில் கருப்பர்களை வைத்து வேலை வாங்க முடியாத அங்குள்ள தோட்ட முதலாளிகள். பிரிட்டிஷாரின் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவின் அப்பாவி கூலித்தொழிலாளர்கயை ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களாக தென்னாப்பிரிக்காவிற்கு அழைத்து சென்றனர். அதில் தமிழ்நாட்டிலிருந்தே அதிகம் பேர் அடிமைகளாக சென்றனர். இங்கிருந்து சென்றவர்கள் தென்னாப்பிரிக்காவில் இருந்த காலத்தில் தென்னாப்பிரிக்க நீதிமன்றம் கிறிஸ்தவ சட்டப்படியும், திருமண பதிவாளர் சட்டப்படியும், நடக்கும் திருமணங்கள் மட்டுமே செல்லும் என்றும் அப்படி நடக்காத திருமணங்கள் செல்லாது என்றும் அங்கு குடியேறிய இந்திய கூலிகளுக்கு எதிராக 1913 இல் ஒரு தீர்ப்பை வழங்கியது.
அதோடு கடுமையான வரி உள்ளிட்ட கொடுமைகளுக்கு எதிராக தென்னாப்பிரிக்காவில் குடியேறிய இந்தியர்களுக்கு எதிராகவே அமைந்தது. திருமணமான இந்திய பெண்களின் சட்டப்பூர்வமான மனைவிகளின் தகுதி கேள்விகுறியாகியது. இந்த கொடுமையான சட்டத்தை எதிர்த்து இந்திய மக்கள் அங்கு அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தை கேள்விப்பட்ட காந்திஜியும் இந்தியர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டு, போராட்டத்திற்கு தலைமை ஏற்றுநடத்தினார். அந்த போராட்டங்களின் சொற்பொழிவு வள்ளியம்மையை ஈர்த்தது. அந்த போராட்டத்தின்போது பிரிட்டிஷார் காந்தியாரின் மீது துப்பாக்கியை நீட்டி முதலில் என்னை சுடு பிறகு அவரை சுடலாம் என துணிவோடு முன்னால் வந்து நின்றவர் வள்ளியம்மை.
ஜொகன்னஸ்பார்க்கில் திருமணசட்டத்திற்கு எதிராக மகளீர் சத்தியாக்கிரக படை அணிதிறண்டது. நகர எல்லைக்குள் படை வந்ததும் தடுத்து நிறுத்தினர், தடையை மீறி வந்ததால் கைது செய்து மூன்றுமாதம் சிறையில் அடைக்கபட்டனர்.வள்ளியம்மையும் பீட்டர் மாரிஸ் பார்க் சிறையில் காந்தியின் துணைவியார் கஸ்தூரிபாயுடன் சிறையில் அடைக்கப்பட்டார்.
மூன்று மாதம் சிறையில் இருந்த வள்ளியம்மைக்கு சுகாதரமற்ற சிறைவாழ்க்கையும், கடினமான சிறை வேலையாலும் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இந்த நிலையில் அவரை தென்னாப்பிரிக்க அரசு விடுவிக்க முன்வந்தது ஆனால் வள்ளியம்மை மறுத்துவிட்டார். கோரிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பிறகு 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி விடுதலையாகி வெளியில் வந்தார்.
நோய்வாய்பட்டு விடுதலை செய்யப்பட்ட வள்ளியம்மையை அவரது வீட்டிற்கே காந்திஜி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தாய்நாட்டுக்காக மீண்டும் சிறை செல்லவும் சிறை சென்று உயிரை விடவும் தயார் என்றும், அதை விட மகிழ்ச்சி எனக்கு வேறு எதுவும் இல்லை என்று காந்திஜியுடன் வள்ளியம்மை நெகிழந்து கூறியுள்ளார். சிறையில் இருந்து வெளியில் வந்து பத்து நாட்கள் கடும் நோயோடு போராடினார். பிறகு அவரது பிறந்த நாளான 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ம் தேதியன்றே இறந்துபோனார்.
தென்னாப்பிரிக்காவில் பிறந்தாலும் தனது பூர்வீகம் தில்லையாடி கிராமம் என்பதால் தில்லையாடி வள்ளியம்மை என்று அன்று முதல் அழைக்கப்பட்டார். காந்தியும் தனது கூட்டங்களில் வள்ளியம்மையின் தியாகத்தை கூறி நெகிழந்துள்ளார். பல ஆண்டுகள் கழித்து தில்லையாடிக்கு வந்திருந்த காந்தி அந்த மண்ணை அள்ளி கண்ணில் ஒத்திக்கொண்டார். அப்போது தில்லையாடி வள்ளியம்மைதான் எனக்கு முதலில் விடுதலை உணர்வை ஊட்டினார் என கூறியிருக்கிறார்
ஆனால் இந்திய சுதந்திர அரசு வள்ளியம்மையின் நினைவை மறந்துவிட்டது, வள்ளியம்மை தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் மறந்துவிட்டது. அவரது பிறந்தநாளில் மட்டும் கட்டாயத்தின் பெயரில் அரசு பூமாலை போடுகிறது. மற்றபடி ஆளில்லா, பாழான கட்டிடமாகவே கிடக்கிறது.